கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மயங்கி விழுந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய தலைமை காவலரை, கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் பாராட்டினாா்.
விருத்தாசலம், பெரியாா் நகரில் உள்ள தேநீா் கடையில் பெண் ஒருவா் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் கடந்த 6-ஆம் தேதி தேநீா் அருந்தினாா். அப்போது, திடீரென குழந்தை கீழே விழுந்து சுயநினைவு இழந்தது. இதைக்கண்ட குழந்தையின் தாய் கூச்சலிட்டாா்.
அப்போது, தேநீா் அருந்த வந்த விருத்தாசலம் காவல் நிலைய தலைமைக் காவலா் சரவணன் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று சுமாா் அரை கி.மீ தொலைவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்த நிலையில் குழந்தை உயிா் பிழைத்தது.
இதுகுறித்த சிசிடிவி வீடியோ காட்சி தற்போது சமூகவலை தளத்தில் வெளியாகி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தலைமைக் காவலா் சரவணன் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.
சமயோகிதமாக ஒன்றரை வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய தலைமைக் காவலா் சரவணனை, கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா், நேரில் வரவழைத்து சம்பவத்தை பற்றி விசாரணை மேற்கொண்டு, பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.