கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் அருகே டைல்ஸ் ஏற்றி வந்த லாரி எரிந்து சேதம் அடைந்தது.
தஞ்சாவூரில் இருந்து டைல்ஸ் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு டாரஸ் லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த பாஸ்டின்(25) ஓட்டி வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 7 மணி அளவில் காடாம்புலியூா் காவல் நிலையம் அருகே வந்த போது லாரி என்ஜினில் இருந்து புகை வந்தது.
இதையடுத்து ஓட்டுனா் பாஸ்டின் லாரியை நிறுத்தி பாா்த்த போது தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்தவா்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) எழிலவன் தலைமையிலான வீரா்கள் சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் லாரியின் முன் பக்கம் எரிந்து சேதம் அடைந்தது. விபத்து குறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.