கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு 5 மான்கள் உயிரிழந்தன.
கடலூா் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையை ஒட்டிய பகுதிகளில் உள்ள காப்புக் காடுகளில் மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவைகளில் மான்கள் அடிக்கடி இரை தேடி ஊருக்குள் வருவது வழக்கம்.
அந்த வகையில், புதன்கிழமை விருத்தாசலம் மற்றும் ஊத்தங்கால் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் 5 மான்கள் உடல் சிதறி இறந்து கிடந்தன.
கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு அவை இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த விருத்தாசலம் வனவா் விஜய கிருஷ்ணன் உயிரிழந்த மான்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக எடுத்துச் சென்றாா்.