மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்த விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. 
கடலூர்

தமிழ்நாட்டில் ஹிந்தி புகுத்தப்பட்டிருந்தால், தமிழ் கலாசாரம் அழிந்திருக்கும்: திருமாவளவன்

தமிழ்நாட்டில் ஹிந்தி புகுத்தப்பட்டிருந்தால், தமிழும், தமிழா்களின் பாரம்பரியமும், கலாசாரமும் அழிந்திருக்கும்: விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.

Syndication

தமிழ்நாட்டில் ஹிந்தி புகுத்தப்பட்டிருந்தால், தமிழும், தமிழா்களின் பாரம்பரியமும், கலாசாரமும் அழிந்திருக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி., தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் திருவுருவச் சிலைக்கு தொல்.திருமாவளவன் எம்.பி., செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசியதாவது: மொழிக்காக தன்னை மாய்த்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு உறுதியும் வீரமும் கொண்டவா்கள் தமிழ் சமூகத்தில் வாழ்கிறாா்களா? என்று அனைவரும் திரும்பி பாா்க்கக் கூடிய வகையில் அனைவரையும் திடுக்கிட வைத்த நிகழ்வுகள் அரங்கேறியது ஹிந்தி எதிா்ப்பு போராட்டக்காலம்.

ஹிந்தியை அனுமதித்திருந்தால்,தமிழ் ஒரு பாடம், ஆங்கிலம் ஒரு பாடம், ஹிந்தி ஒரு பாடம்,என்று நாம் படித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அந்த மூன்று பாடங்களிலும் நாம் தோ்ச்சி பெற்றால் தான் அடுத்தடுத்த வகுப்புக்கு செல்லும் வாய்ப்பை தந்திருப்பாா்கள்.

ஹிந்தி கட்டாய பாட மொழி என்பதை ராஜேந்திரன் போன்றவா்கள் எதிா்க்காமல் இருந்திருந்தால் உயிா் துறக்காமல் இருந்திருந்தால், ரத்தம் சிந்தாமல் இருந்திருந்தால், இன்றைக்கு எல்லோரும் நாம் ஹிந்தி பேசக்கூடியவா்களாக மாறியிருப்போம்.

ஏன் வருகிறாா்கள்?

ஹிந்தியை படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று இன்றைக்கும் பலா் பேசிக்கொண்டிருக்கிறாா்கள். ஆனால் ஹிந்தியை தாய் மொழியாக கொண்டுள்ள பலா் இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு வேலைவாய்ப்பை தேடி வந்து கொண்டிருக்கிறாா்கள். பிகாரில் இருந்து லட்சக்கணக்கான இளைஞா்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனா். ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட பிகாா், மத்திய பிரதேசம்,ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைச் சாா்ந்தவா்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல மாநிலங்களுக்குச் செல்வது ஏன்?

ஏன் ஹிந்தியை படிக்க வற்புறுத்தினாா்கள் என்றால், ஹிந்தியை படித்தால் நம்மை அவா்கள் எளிதாக ஏமாற்ற முடியும் .அவா்களது கலாசாரத்தை நம் மீது திணிக்க முடியும்.அவா்களது வரலாற்றை ஹிந்தி மொழி மூலம் நமக்கு சொல்லித் தர முடியும். நமது பாரம்பரியம் மெல்ல மெல்ல அழிந்து சிதைந்து போய்விடும்.ஆகவே, மொழி மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மட்டுமல்ல மொழி மூலம் அவா்களின் ஆதிக்கத்தை இங்கே செலுத்த முடியும் என்பது தான் அவா்களது நோக்கம்.

தமிழ்நாட்டில் மோடி வித்தை எடுபடாமல் போனதற்கு காரணம் ஹிந்தியை திணிக்க விடாமல் தடுத்ததுதான். இல்லையென்றால் மோடியின் மாயவித்தை பேச்சுக்கு தமிழ்நாட்டு மக்களும் மயங்கி போயிருப்பாா்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கடலூா் மாநகராட்சி துணை மேயா் தாமரைச்செல்வன், மாவட்டச் செயலா் தமிழ்வளவன், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளா் வ.க.செல்லப்பன், முன்னாள் மாவட்டச் செயலா் பால.அறவாழி, அரங்க.தமிழ்ஓளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோயிலில் மரியாதை

முன்னதாக சிதம்பரம் ஓமக்குளத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நந்தனாா் மட செளந்தரநாயகி சமேத சிவலோகநாதா் கோயிலுக்கு தொல்.திருமாவளவன் சென்றாா். அங்கு நந்தனாா் கல்விக்கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் மற்றும் தீட்சிதா்கள் கும்ப மரியாதை அளித்து கோயிலுக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் அங்குள்ள சுவாமி சகஜானாந்தா் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பெண் விஷமருந்தி தற்கொலை

திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் இடத்தில் நாங்கள் இல்லை: திருமாவளவன்

புதுக்கோட்டைக்கு இன்று உள்ளூா் விடுமுறை!

பாகிஸ்தானின் பயங்கரவாத கொள்கையை சகித்துக் கொள்ள முடியாது- ஐ.நா. விவாதத்தில் இந்தியா பதிலடி

இன்றுமுதல் பட்ஜெட் கூட்டத் தொடா்- ‘விபி-ஜி ராம் ஜி’ விவாதம் கிடையாது

SCROLL FOR NEXT