18.2.1976: கருணாநிதி, மாஜி மந்திரிகள் கட்சியிலிருந்து விலக தி.மு.க. எம்.பி. கோரிக்கை
கருணாநிதி, மாஜி மந்திரிகள் கட்சியிலிருந்து விலக தி.மு.க. எம்.பி. கோரிக்கை பற்றி...
சென்னை, பிப். 17 - லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக் கமிஷனால் விசாரிக்கப்படவிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், இதர முன்னாள் தி.மு.க. அமைச்சர்களும் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ராஜ்யசபை தி.மு.க. உறுப்பினர் எஸ்.எஸ். ராஜேந்திரன் கோரியுள்ளார்.
தாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படும் வரை அவர்கள் கட்சியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.
இது சம்பந்தமாக தாம் கருணாநிதிக்கும், நெடுஞ்செழியனுக்கும் கடிதம் எழுதியிருப்பதாகவும், தாம் கொண்டுள்ள இதே கருத்தைக் கட்சியில் ஏராள ஊழியர்களும் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கட்சி செயலாளர் நெடுஞ்செழியன் கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டவில்லை என்றால் என்ன நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருடனும் தொடர்பு கொண்டு அவர்களது ஆதரவைப் பெறுவேன் என்று தெரிவித்த ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தமது கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பர் என்று தாம் கருதுவதாகவும் சொன்னார்.
ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கும், அவரது இயக்கத்துக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் என்று எச்சரித்து தாம் கழகத் தலைவருக்கும், செயலாளருக்கும் கடிதம் எழுதியதாகவும், கோவை மகாநாட்டில் ஏ.வி.பி. ஆசைத்தம்பி பேசும்போது இந்திரா காந்தி தேர்தலை நடத்தவில்லை என்றால் தேர்தலை நாமே நடத்துவோம் என்று பேசினார் என்றும், அவரை கருணாநிதி கண்டிக்கவில்லை என்றும் ராஜேந்திரன் எம்.பி. மேலும் கூறினார்.
இவ்விஷயங்களையெல்லாம் கட்சித் தலைவரின் கவனத்துக்குத் தாங்கள் ஏன் முன்னதாகவே கொண்டுவரவில்லை என்று கேட்டதற்கு, அவரைச் சந்திக்க தாம் அனுமதிக்கப்படவில்லை என்று ராஜேந்திரன் பதிலளித்தார்.
ஏராளமான ஊழியர்கள் கட்சியிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார்கள். விசாரணைக்குட்பட்டுள்ள கருணாநிதியும், இதர அமைச்சர்களும் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்வதே கட்சியைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
18.2.1976: DMK MPs demand resignation of Karunanidhi and former ministers from the party
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.