சைவமும் தமிழும் இரு கண்கள்!
'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து' என்னும் சொல்லுக்கிணங்க வாழ்ந்து காட்டியவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை, பன்மொழியறிஞர் எனப் போற்றப்படும் மறைமலையடிகளார்.
'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து' என்னும் சொல்லுக்கிணங்க வாழ்ந்து காட்டியவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை, பன்மொழியறிஞர் எனப் போற்றப்படும் மறைமலையடிகளார். தமிழ்ப் பணியையும், சைவத்தையும் இரு கண்கள் போல் காத்து வந்தார் என்பதை அவரது வாழ்வியல் நிகழ்ச்சிகள் எடுத்துரைக்கின்றன.
பன்மொழியறிஞர், தனித்தமிழ்த் தந்தை என தமிழ் இலக்கிய மொழி வரலாற்றில் தனக்கென தனி ஓர் இடத்தைப் பெற்றவர் வேதாசலம் சுவாமி என்று அழைக்கப்பட்டவர். தமிழில் உள்ள பிறமொழிச் சொற்களை நீக்கி, தூய தமிழிலேயே (தனித் தமிழ்) பேசவும், எழுதவும் வேண்டும் என்ற உறுதியைத் தன்னிலிருந்து தொடங்குவது என முடிவெடுத்து, தமது பெயரை வேதாசலம்-(சுவாமி துறவறம் பூண்டதால்) மறை-வேதம்; அசலம்-அசைக்க முடியாதது-மலை; சாமி-அடிகள் என தூய தமிழில் மாற்றிக் கொண்டவர்.
1916-இல் தனித்தமிழ் இயக்கம்: அடிகளாரது காலகட்டத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொழித்தூய்மைக்காகப் போராடிய அறிஞர்களில் முதன்மையாக இருந்தவர் மறைமலையடிகளாவார். தனித்தமிழ் இயக்கம் 1916-ஆம் ஆண்டு அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்டது. மொழிக்கலப்பு என்பது பல மொழிகள் பேசும் இன மக்கள் ஒன்றிணைவதால் தமிழில் அளவின்றி பிறமொழிச் சொற்கள் கலந்ததன் விளைவாக தமிழிலிருந்து பல கிளைமொழிகள் தோன்றின என்று மொழியியல் ஆய்வு அறிஞர்களின் முடிபாக உள்ளது.
Advertisement
Advertisement
தமிழிலிருந்து மேலும் ஒரு மொழி பிரிவதை தடுத்து நிறுத்தவே தனித் தமிழியக்கம் தோற்று விக்கப்பட்டது. 'பிறமொழிக் கலப்பால் தோன்றியதேயன்றி பிறமொழி வெறுப்பால் தோன்றியதன்று தனித் தமிழியக்கம்' பிறமொழிகள் கற்பதே குமுக இனமக்கள் முன்னேற்றத்துக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது ஆகும் என்பது அடிகளாரின் முடிபு மட்டுமல்ல, மொழியறிஞர்கள் முடிபும் அதுதான். அதுபோல் வேதாசலம் ஆர்வத்துடன் (அடிகள்) படித்ததுதான் சமற்கிருதம்.
மொழியாக்கத்தில் புதுமை: பிறமொழியிலுள்ள நூலின் கருத்துகளை தாய்மொழியில் மொழிமாற்றம் செய்வதென்பது வரிக்கு வரி அப்படியே பொருள் தந்து எழுதுவதாகும். ஆனால், மொழியாக்கம் என்பது அந்த மொழியின் உட்கரு, பொருட்சுவை சிறிதும் குன்றாமல் மொழிமாற்றம் பெறும் மொழியின் கருத்துச் சுவைக்கேற்ப அச்செய்தியை வைத்து எழுதுவதுதான் (மொழிச்சாறு) மொழியாக்கமாகும். அவ்வகையில் அடிகளாரின் சாகுந்தல நாடக நூல் இன்றளவும் சிறப்புடன் விளங்குகிறது.
தமிழ் இலக்கணத்தில் புலமை: அடிகளாரின் புலமைக்கு எடுத்துக்காட்டு. சென்னை கிருத்துவக் கல்லூரியில் புலவர்களுக்கான நேர்முகத் தேர்வில் அடிகளார் கலந்துகொண்ட சுவையான நிகழ்ச்சி.
பரிதிமாற்கலைஞர், 'குற்றியலுகரத்திற்கும் முற்றியலுரகத்திற்கும் வேறுபாடு என்ன?' என்றார். அதற்கு அடிகளார், 'அஃது எனக்குத் தெரியாது' எனப் பகர்ந்தார்.
பரிதிமாற்கலைஞர், 'இவ்விளைஞனுக்கு வேலை தரலாம்' என உடன் இருந்த புலவர் குழுவினரிடம் கூறினார். உடனே புலவர் குழுவினர், ' தெரியாது என்பவருக்கு வேலைத் தருகிறீர்களே... இது வியப்பாக இருக்கின்றதே?' என்றனர்.
பேரா.மனோன்மணியம் சுந்தரனாரும் அடிகளின் புலமையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கியதை புலவர் குழுவினர் பார்த்துள்ளனர். ' பரிந்துரைக் கடிதப்படி இவருக்கு வேலை தருகிறார் போலும்' எனப் புலவர் குழுவினர் கூறினர். உடன் பரிதிமாற்கலைஞர், 'இலக்கண வினாக்களுக்கு விடைக் கூறத் தேவையில்லை... சான்று காட்டினாலே போதுமானது' எனக் கூறினார்.
'அஃது என்பது ஆய்தத்தொடர் குற்றியலுகரம். எனக்கு என்பது வன்தொடர்க் குற்றியலுகரம். தெரியாது என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம். எனவே தக்கவர்' எனக் கூறினார். அப்பொழுது அடிகளாரின் வயது 22 ஆகும்.
நாள்குறிப்பு: அடிகளார் தாம் இறக்கும் வரையிலும் அன்றாடம் நாள்குறிப்பு எழுதும் பழக்கமுடைய வராக இருந்தார். தனித்தமிழ் இயக்கம் கண்ட அடிகளார் பிறமொழிகள் மீது பகைமை பாராட்டாதவர் என்பதற்கு சான்றாக அவரது நாள்குறிப்பு முழுவதும் அழகான ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தாம் எழுதிய தமிழ்நூல்கள் அனைத்திலும் முன்னுரை முப்பது பக்கங்களுக்கு மிகாமல் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். ஆங்கிலம் படித்தோரும் அந்த முன்னுரையைப் படித்து தமிழ்கற்க முன்வர வேண்டும் என்று விரும்பி எழுதினார்.
மொழிச் சீர்திருத்தம்: மொழிச் சீர்திருத்தம் பற்றி அடிகளார், 'ஒரு மொழியைச் சீர்திருத்தம் பண்ணுவது ஒருவரிருவரால் முடியும் எளிய காரியமன்று. சுழன்று செல்லும் புயல்காற்றினையும், அணை கடந்து பெருகும் வெள்ளத்தினையும் இடைமறித்து நிறுத்தினும், நிறுத்தலாகும் ஒரு மொழியின் விரைந்த செலவை அடக்கியாளுதல் யார்க்கும் முடியாத தொன்றாகும். தவிர்க்க முடியாதவேளைகளில் சிறப்புப் பெயர்களையும், குறியீடுகளையும் வழங்கி தேவையான இடங்களில் மட்டும் வட சொற்களை ஏற்கலாம்' என அடிகள் கூறியுள்ளார்.
அடிகளார் மொழி ஆய்வு நிலையையும் கடந்து கணியம் (அஸ்ட்ராலஜி), அறிதுயில் (ஹிப்னாடிஸம்) போன்ற துறைகளிலும் தம்அறிவை பெருக்கிக் கொண்டார். தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் நிரம்ப புலமை பெற்றிருந்தார். அடிகளார் தாம் எந்தத்துறையில் ஈடுபடுவது என்றாலும் அதனை நன்கு ஆய்தறிந்துணர்ந்து தெளிந்த பின்னரே அக்கருத்தியலை ஏற்றுக்கொள்வது அவரது முடிபாகும்.
மருத்துவ முறையையும், ஜாதகமும் அறிந்தவர்: இந்தச் செயலை எடுத்துக்காட்டும் வண்ணம் தமது வழி ஆராய்ச்சி மேற்கொண்டு வெற்றியும் கண்ட நிகழ்ச்சியையே சான்றாகக் கூறலாம். அடிகளாரின் மூன்றாம் மகன் திருநாவுக்கரசுக்கு பதினான்கு அகவை இருக்கும்பொழுது இளைப்பிருமல் நோய் (ஆஸ்துமா) நோய் தாக்கியது. அடிகளார் தாம் கற்றுணர்ந்த சித்த மருத்துவ முறையைக் கொண்டு சிகிச்சைஅளித்தும் நலம் பெறவில்லை. அவ்வப்போது சிறிது குணம் தெரியும். மீண்டும் நோய் வந்துவிடும். பல மருத்துவர்களைக் கொண்டு மாற்று மருத்துவச் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. நோயின் கடுமை மேலும் மகனைத் தாக்கியது. அடிகளார் அனைத்து சிகிச்சை முறைகளையும் நிறுத்திவிட்டார்.
மகன் திருநாவுக்கரசுவின் கணியத்தை (ஜாதகம்) ஆராய்ந்து பார்த்ததில் தனது மறைவுக்குப் பின் தனது புகழை நிலைநிறுத்துவதில் முதன்மையாக இருப்பார் என்றறிந்தார். இதன் பொருட்டு, தாம் ஆங்கிலத்தில் அறிதின் கற்றுணர்ந்த அறிதுயில் சிகிச்சையின் மூலம் குணமாக்கினார். எவ்வாறு குணமாக்கினார் தெரியுமா?
பெரும்பாலும் இரவு நேரமே இதற்கு உகந்தது. மகனை நீண்ட சாய்வு இருக்கையில் வைத்து ஆவிவிளக்கு (பெட்ரோமாக்ஸ்) மூலம் முகத்தில் ஒளிபடும்படி வைத்து தம் கைகளின் இருவிரல்கள் புருவத்தின் நடுவில் கைபட்டும் படாமலும் வைத்து கணுக்கால்வரை ஒரு மணியளவு வரையில் தமிழ் மந்திரச்சொற்கள் சிலபோது ஆங்கிலத்திலும், 'உறக்கம் உன்னைத் தழுவுகிறது. நீ நலமடைந்துவிட்டாய். இந்நோய் உன்னைவிட்டு நீங்குகிறது. முழு நலமடைந்து விட்டாய்' என்று கூறி தலைமுதல் கணுக்கால்வரை நீவிவிட்டு அந்த நோயை அவரை விட்டு அகற்றினார். இவ்வாறு மூன்று திங்கள் தொடர் சிகிச்சையின் பயனாக மகன் முழுநலம் பெற்றார்.
மறைமலையடிகள் நூல் நிலையம்: அடிகள் சிறு அகவை முதற்கொண்டே நூல்கள் படிப்பதில் மிகஆர்வம் கொண்டவர் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்த நிகழ்ச்சி. அடிகள் மணம்முடிக்கும் பருவத்தில் தம் தாயாரிடம் நான் கேட்கும் நூல்களை வாங்கித் தந்தாலன்றி மணம் முடிக்க முடியாது என்று உறுதிபடக் கூறினார். தாயார் அந்த நூல்களை வாங்கிக் கொடுத்த பின்பே மணம் முடித்தார்.
பிற்காலத்தில் அடிகள் ஆராய்ச்சிக்காக வாங்கிய நூல்கள் 4 ஆயிரத்துக்கு மேல். அடிகள் நூல்கள் வாங்கும் வேட்கை அளப்பரியது. நூல்கள் வாங்கிக் கொண்டு இல்லம் வரும் வேளையில் அவரது துணைவியார் அடிகளிடம், 'எனக்கும், பிள்ளைகளுக்கும் என்ன தின்பண்டம் வாங்கி வந்தீர்கள்' என வினவுவார். 'உனக்கோ வயிற்றுப்பசி, எனக்கோ அறிவுப்பசி' என்றுரைப்பார்.
'ஒரு புதிய நூலை வாங்கிப் படிக்கும் பொழுது இறைவனின் பேரின்பம் பெற்றதாக உணர்கிறேன்' என தம் நாட்குறிப்பில் குறித்துள்ளார். ஆங்கிலம்-2000, தமிழ்-1500, வடமொழி மற்றும் பிறமொழி நூல்கள் 500. தம் வாழ்நாளில் நூல்கள் வாங்குவதற்கே பெரும் தொகையை செலவுசெய்தார்.
தாம் அரிதின் முயன்று சேர்த்த அனைத்து நூல்களையும் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் பயன்பெறும் நோக்கில், 'மறைமலையடிகள் நூல் நிலையம்' என்ற பெயரில் அமைத்திட வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளார் அடிகளார். தற்பொழுது இந்நூல் நிலையம், சென்னையில் புகழ்பெற்ற கன்னிமாரா நூலகத்தின் ஒருபகுதியில் செயல்பட்டு வருகிறது.
(ஜூலை 15: மறைமலை அடிகளாரின் 150 -ஆவது பிறந்த நாள்)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.