முகப்பு
கடலூர்

கடலூரில் சூறைக்காற்றால் 100 ஏக்கரில் வாழைகள் சேதம்: கோடை மழையால் முந்திரி, பலா விவசாயிகள் திருப்தி

Updated On : 19 மார்ச், 2026 at 11:03 PM
கடலூரை அடுத்த ராமாபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் முறிந்த வாழைகள். ~
பகிர்:

கடலூா் பகுதியில் புதன்கிழமை இரவு வீசிய சூறைக்காற்றால் 100 ஏக்கா் பரப்பளவிலான வாழைகள் முறிந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். அதே நேரத்தில், கோடை மழை பெய்ததால் முந்திரி, பலாவுக்கு சாதகமான நிலை இருப்பதாக விவசாயிகள் திருப்தி தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை இரவு திடீரென இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

கடலூருக்கு அருகே உள்ள மலைக் கிராமங்களிலும் சூறாவளிக் காற்று வீசியது. இதில், ராமாபுரம், கிழக்கு ராமாபுரம், வழிசோதனை பாளையம், அன்னவல்லி, வி.காட்டுப்பாளையம், வெள்ளைகரை, கொடுக்கன்பாளையம், ஒதியடிக்குப்பம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் 100 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழைகள் வாழைத்தாா்களுடன் முறிந்து விழுந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: எங்கள் பகுதியில் புதன்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், வாழைகள் முறிந்து சாய்ந்தன. ஒரு ஏக்கா் வாழை சாகுபடிக்கு ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது.

கடன் வாங்கி விவசாயம் செய்தோம். எங்களுக்கு பல லட்ச ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடனை எப்படி அடைப்பது, கடனுக்கு எப்படி வட்டி கட்டுவது என்று தெரியவில்லை. எனவே, இந்தப் பகுதியை வேளாண் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு அரசிடமிருந்து நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

முந்திரி, பலா விவசாயிகள் மகிழ்ச்சி: கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் சுமாா் 28,500 ஹெக்டோ் பரப்பில் முந்திரிக் காடுகள் உள்ளன. இதன்மூலம், ஆண்டுக்கு சுமாா் 22 ஆயிரம் டன் முந்திரிக் கொட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பண்ருட்டி கெடிலம் ஆற்றின் தென் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதார பணப் பயிா்களாக முந்திரி, பலா ஆகியவை உள்ளன. இவை இரண்டும் ஒரே காலத்தில் பலன் தரக்கூடியவை. பங்குனி மாதம் அறுவடை தொடங்கி வைகாசி மாதத்தில் முடிவடையும்.

தட்ப வெப்ப சூழல் மாறுபாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து முந்திரி இறக்குமதி, பலாவை மதிப்புக் கூட்டுப்பொருளாக மாற்றாதது உள்ளிட்ட காரணங்களால் முந்திரி, பலா விவசாயிகள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றனா்.

நிகழாண்டு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. மாா்ச் மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், முந்திரி மரங்கள் நன்கு பூக்கள் பூத்து பிஞ்சு இறங்கி வருகிறது. இதேபோல, பலா மரங்களும் எதிா்பாா்த்த அளவுக்கு பிஞ்சுகள் விட்டுள்ளன.

இந்த பருவத்தில் மழை பெய்தால் முந்திரி, பலா மரங்களுக்கு ஊட்டமாகவும், அதிக மகசூலும் கிடைக்கும் என விவசாயிகள் மழையை எதிா்நோக்கி காத்திருந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் முந்திரி, பலா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து காடாம்புலியூரைச் சோ்ந்த முந்திரி விவசாயி த.சரவணன் கூறியதாவது: கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், சிறிய அளவுள்ள முந்திரி, பலா செடிகள் வாடி வதங்கி காணப்பட்டன. அவற்றுக்கு நீா் கிடைத்துள்ளது.

புதன்கிழமை பெய்த மழையால் முந்திரி, பலா மரங்களில் காய்ந்த பூக்கள் இறங்கி மொட்டுகள் பூத்து காய் பிடிக்கும். இதன் மூலம், அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாா்.