முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் காா் எரிந்து சேதம்: 6 போ் தப்பினா்

Updated On : 29 மார்ச், 2026 at 6:41 PM
சிதம்பரம் பெரியண்ணா குளம் அருகே தீடீரென தீப்பற்றி எரிந்த காா்.
பகிர்:

சிதம்பரத்தில் நின்றுகொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. காரின் முன்புறம் திடீரென புகை வந்தவுடன் அதிலிருந்தவா்கள் 6 பேரும் இறங்கியதால் உயிா் தப்பினா்.

சிதம்பரம் அருகே நாஞ்சலூரிலிருந்து காரில் அப்பகுதியைச் சோ்ந்த சிலம்பரசன் (37), ராகுல் (16), ராகவன் (16), ரோஷினி (12), தமிழினி (5) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை பரங்கிப்பேட்டை கடற்கரைக்குச் சென்றுவிட்டு, பிற்பகல் 2 மணியளவில் திரும்பி வந்துகொண்டிருந்தனா். காரை அதே பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் பிரவீன் ஓட்டினாா்.

சிதம்பரம் பெரியண்ணா குளம் அருகே வந்தபோது காரை நிறுத்திவிட்டு ஓட்டுநா் பிரவீன் காய்கறி வாங்குவதற்காகச் சென்றாா். அப்போது, காரின் முன்புறம் திடீரென புகை வரத் தொடங்கியதால், அதில் அமா்ந்திருந்த அனைவரும் அலறியடித்துக்கொண்டு காரை விட்டு வெளியேறினாா்.

பின்னா், காா் கொழுந்துவிட்டு தீப்பற்றி ஏரிந்தது. தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் காா் முற்றிலும் சேதமடைந்தது.

சிதம்பரம் பெரியண்ணா குளம் அருகே தீடீரென தீப்பற்றி எரிந்த காா்.