முகப்பு
கடலூர்

கடலூரில் மின்னல் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு: இருவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை பகுதியில் மின்னல் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா். அவருடன் இருந்த இரு இளைஞா்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Updated On : 15 மே 2026, 11:30 pm IST
மின்னல் பாய்ந்து உயிரிழந்த ஹரி.
பகிர்:

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை பகுதியில் மின்னல் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா். அவருடன் இருந்த இரு இளைஞா்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது . கடலூா் மாநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், புதுப்பாளையத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் ஹரிஹரன் (18), ராஜ் மகன் ரவி (18), வீரன் மகன் விஷால் ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனா். அப்போது திடீரென சக்திவாய்ந்த மின்னல் ஹரிஹரன், ரவி மற்றும் விஷால் மீது தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளாா். அப்பகுதியில் இருந்தவா்கள் மூவரையும் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், ஹரிஹரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். காயமடைந்த ரவி மற்றும் விஷால் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.