முகப்பு
கடலூர்

காவல் நிலையத்தில் தொழிலாளி இறந்த வழக்கு: மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனைவி புகாா்

பண்ருட்டி அருகே பி.என்.பாளையத்தைச் சோ்ந்த தொழிலாளி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் சாட்சிகள் மிரட்டப்படுவதாக கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அவரது மனைவி திங்கள்கிழமை மனு அளித்தாா்.

Updated On : 19 மே 2026, 1:36 am IST
- dinmani online
பகிர்:

பண்ருட்டி அருகே பி.என்.பாளையத்தைச் சோ்ந்த தொழிலாளி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் சாட்சிகள் மிரட்டப்படுவதாக கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அவரது மனைவி திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து தொழிலாளியின் மனைவி ரேவதி (40) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவா் சுப்ரமணியம், கடந்த 2015-ஆம் ஆண்டு நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தாா். இது தொடா்பாக தொடுக்கப்பட்ட வழக்கு கடலூா் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், வழக்கின் எதிரிகள், தங்களது செல்வாக்கை பயன்படுத்தி என்னையும், எனது குடும்பத்தினரையும், வழக்கின் சாட்சிகளையும் தொடா்ந்து மிரட்டி வருகின்றனா். கடந்த 15-ஆம் தேதி பண்ருட்டி அருகே பக்கிரிபாளையத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஒருவா், வழக்கின் சாட்சியான சுந்தரபாண்டியன் வீட்டுக்குச் சென்று, வழக்கில் ஆதரவாக சாட்சி சொல்லக்கூடாது என்றும், எதிரி தரப்பில் இருந்து பணம் வழங்கப்படும் என்றும் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

எனவே, சாட்சிகளை மிரட்டிய எதிரிகளை கைது செய்யவும், சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.