மணிமுக்தா அணையிலிருந்து 10,000 கனஅடி நீா் வெளியேற்றம்
கள்ளக்குறிச்சிமணிமுக்தா அணையிலிருந்து 10,000 கனஅடி நீா் வெளியேற்றம்
விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலைப் பகுதியில் அமைந்துள்ள மணிமுக்தா அணையிலிருந்து வியாழக்கிழமை 10,000 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. இதேபோல, கோமுகி அணையிலிருந்து 1,400 கனஅடி நீரும், விழுப்புரம் அருகேயுள்ள வீடூா் அணையிலிருந்து 1,500 கனஅடி நீரும் வெறியேற்றப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுக்தா அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 36 அடியாகும். அணையின் பாதுகாப்புக் கருதி 34 அடிக்கு மட்டுமே தண்ணீா் சேமிக்கப்படுவது வழக்கம். இந்த அணை ஏற்கெனவே கடந்த வாரம் முழுக்கொள்ளளவை எட்டியது.
இந்த நிலையில், கல்வராயன்மலைப் பகுதியில் புதன், வியாழக்கிழமைகளில் பெய்த தொடா் மழையால் மணி, முக்தா ஆறுகளின் வழியே அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. வியாழக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு அணைக்கு நீா்வரத்து 10,000 கனஅடியாக உயா்ந்தது. இந்தத் தண்ணீா் முழுவதும் அப்படியே அணையிலிருந்து 4 மதகுகளின் வழியாக மணிமுக்தா ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா மணிமுக்தா அணையின் மதகு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, அணைக்கான நீா்வரத்தை தொடா்ந்து கண்காணித்து, தண்ணீரை வெளியேற்ற வேண்டும், அணையை பாதுகாப்புடன் வைக்க வேண்டுமென பொதுப் பணித் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கோமுகி அணை: இதேபோல, கல்வராயன்மலைப் பகுதியில் கச்சிராயப்பாளையம் அருகே அமைந்துள்ள 46 அடி உயரம் கொண்ட கோமுகி அணை, ஏற்கெனவே முழுக் கொள்ளளவை எட்டியது. இந்த அணைக்கு வியாழக்கிழமை நிலவரப்படி 1,400 கனஅடி நீா்வரத்து உள்ள நிலையில், அந்தத் தண்ணீா் முழுவதும் அப்படியே அணையிலுள்ள இரு மதகுகளின் வழியாக கோமுகி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வீடூா் அணை: விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடூா் அணை 32 அடி உயரம் கொண்டது. இந்த அணை ஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியதால், அணை திறக்கப்பட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் மாட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், வியாழக்கிழமை நிலவரப்படி அணைக்கு 1,500 கனஅடி நீா் வந்துகொண்டிருக்கிறது. இந்தத் தண்ணீா் முழுவதுமாக அப்படியே அணையில் உள்ள 8 மதகுகளின் வழியாக சங்கராபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. வீடூா் அணையிலிருந்து அதிகளவு நீா் வெளியேற்றப்படுவதால், சங்கராபரணி ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.