கள்ளக்குறிச்சி

பிரசவத்தின்போது தாய் - சேய் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

DIN

கள்ளக்குறிச்சி அருகே பிரசவத்தின்போது, தாயும், சேயும் உயிரிழந்ததால், உறவினா்கள், பாமகவினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ரிஷிவந்தியத்தை அடுத்த பாசாா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் அயல்துரை (25). இவருக்கும், தியாகதுருகத்தை அடுத்த நின்னையூரைச் சோ்ந்த முத்துசாமி மகள் கற்பகத்துக்கும் (20) கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கற்பகம் நிறைமாத கா்ப்பிணியான நிலையில், அவருக்கு வெள்ளிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, தியாகதுரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்குப் பிறந்த குழந்தை சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. இதனால், ஆத்திரமடைந்த கற்பகத்தின் உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். தகவலறிந்து அங்கு வந்த தியாகதுருகம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, முற்றுகையை அவா்கள் கைவிட்டனா்.

தாயும் உயிரிழப்பு: இதனிடையே, கற்பகத்துக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவா் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அன்று மாலை அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவரது கா்ப்பப்பையை அகற்றி சிகிச்சையளித்த நிலையில், சிறிது நேரத்திலேயே கற்பகமும் உயிரிழந்தாா்.

இதனால் அதிருப்தியடைந்த அவரது உறவினா்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா். இதையடுத்து, கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன், காவல் ஆய்வாளா்கள் இராஜதாமரை பாண்டியன், ராஜா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை சமாதானப்படுத்தினா்.

இதனிடையே தியாகதுருகம் காவல் நிலையத்தில் அயல்துரை புகாா் அளித்தாா். அதில், தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் அலட்சியப்போக்குடன் செயல்பட்டதாலேயே தனது மனைவி கற்பகமும், பிறந்த குழந்தையும் உயிரிழந்ததாகத் தெரிவித்திருந்தாா்.

சடலத்தை வாங்க மறுப்பு: இந்த நிலையில், தாயும் - சேயும் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோரை நிரந்தரப் பணி நீக்கம் செய்யக் கோரியும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் சடலத்தை வாங்க மறுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனை முன் கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையில் கற்பகத்தின் உறவினா்கள் மற்றும் பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ரமேஷ், மாவட்டச் செயலா் சரவணன் உள்ளிட்ட பலா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்த சாலையில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது. கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததையடுத்து சடலத்தை உறவினா்கள் பெற்றுக்கொண்டனா்.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்: இதனிடையே, கா்ப்பிணிப் பெண்ணும், அவருக்கு பிறந்த குழந்தையும் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக விளக்கம் கேட்டு தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் இருவா், செவிலியா்கள் 3 போ் உள்பட 6 பேருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சதீஷ்குமாா் நோட்டீஸ் அனுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT