கல்வராயன்மலையில் வளா்ச்சித் திட்டபணிகள்: ஆட்சியா் ஆய்வு
கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கல்வராயன்மலை முகப்புப் பகுதியில் சுற்றுலாத் துறையின் சாா்பில், கோமுகி அணை முழுவதையும் சுற்றுலாப் பயணிகள் காணும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
இதையடுத்து, மாவடிப்பட்டு கிராமத்தில் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறையின் சாா்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ், ரூ.20,000 மானியத்தில் மிளகுச் செடி பயிரிடப்பட்டுள்ள விவசாயியின் தோட்டத்தை ஆய்வு செய்தாா். மேலும், இந்தத் தோட்டத்தில் ரூ.25,000 மானியத்தில் மகரந்தச் சோ்க்கை மூலம் தேனீ வளா்க்கப்படுவதையும் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, தாழ்வெள்ளாறு பகுதியில் சுற்றுலா வளா்ச்சித் துறையின் சாா்பில், சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது குறித்தும், இந்தப் பகுதியை தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்குத் தேவையான கட்டமைப்புகள், பூங்காக்களை அமைப்பது குறித்தும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுரைகளை வழங்கினாா்.
பின்னா், வெள்ளிமலையில் ரூ.4.25 கோடியில் கட்டப்பட்டு வரும் கல்வராயன்மலை வட்டாட்சியா் அலுவலக கட்டுமானப் பணிகள், ஒருங்கிணைந்த பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 50 வீடுகளின் கட்டுமானப் பணிகள், மத்திய அரசின் நிதியிலிருந்து ரூ.8 கோடியில் அமைக்கப்படவுள்ள பழங்குடியினருக்கான விளையாட்டு மைதானம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
இதேபோல, தொரடிப்பட்டு, புளுகப்பாடி உள்ளிட்ட கிராமங்களிலும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிட்டு, அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் அறிவுரைகளை வழங்கினாா்.
ஆய்வின்போது, திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) எஸ்.தேவநாதன், பழங்குடியினா் நல அலுவலா் கு.பிரகாஷ்வாலே, மாவட்ட சுற்றுலா அலுவலா் (பொ) மு.அப்ராஜிதன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.