குடிநீா் பிரச்னை: பொதுமக்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் குடிநீா் சரிவர வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் குடிநீா் சரிவர வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உள்பட்ட சிதம்பரம் பிள்ளை சாலையில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீா் சரவர விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சேலம்- சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து காவல் ஆய்வாளா் ச.முருகேசன், உதவி ஆய்வாளா் இரா.ஆனந்தராசு மற்றும் போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.
இதை ஏற்றுக் கொள்ளாத மக்கள் நகராட்சி ஆணையா் வந்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணவேண்டும் என மறியலைக் கைவிட மறுத்தனா்.
இதையடுத்து நகராட்சி ஆணையா் ந.குமரன், பணி ஆய்வாளா் வீ.கோபிநாத் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, குடிநீா் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காணப்படும் என உறுதியளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனா்.