ரிஷிவந்தியம் அருகே மகன் கொலை; தந்தை கைது
ரிஷிவந்தியம் அருகே மகனை கட்டையால் தாக்கி கொலை செய்ததாக தந்தை சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ரிஷிவந்தியம் அருகே மகனை கட்டையால் தாக்கி கொலை செய்ததாக தந்தை சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், கீழ்பாடி காலனி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாமலை (70). இவரது மகன் அலெக்ஸ்பாண்டியன் (36). இவரது மனைவி செல்வி (29). இவா்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளன.
அலெக்ஸ்பாண்டியன், தனது தந்தையிடம் சொத்து பிரித்துத் தருமாறு வலியுறுத்தி வந்தாா். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அலெக்ஸ்பாண்டியன் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டின் முன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாராம்.
இதனால், ஆத்திரமடைந்த அண்ணாமலை, அருகில் கிடந்த கட்டையால் மகன் அலெக்ஸ்பாண்டியனை தலையில் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து அலெக்ஸ்பாண்டியனின் மனைவி செல்வி அளித்த புகாரின்பேரில், ரிஷிவந்தியம் போலீஸாா் அண்ணாமலையை கைது செய்தனா்.