முகப்பு
கள்ளக்குறிச்சி

மதுப்புட்டிகளை பதுக்கி வாக்காளா்களுக்கு விநியோகித்தால் நடவடிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலா்

வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக மதுப்புட்டிகளை பதுக்கினாலோ, கடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கிரண் குராலா அறிவுறுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக மதுப்புட்டிகளை பதுக்கினாலோ, கடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கிரண் குராலா அறிவுறுத்தினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மதுவிலக்கு- ஆயத் தீா்வை துறை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கிரண் குராலா தலைமை வகித்துப் பேசியதாவது:

மதுப் புட்டிகளை முறைகேடாக பதுக்கி, தோ்தலில் வாக்காளா்களுக்கு வழங்கப்படுகின்றனவா என்பதை துறை அலுவலா்கள் கண்காணித்து தடுப்பதுடன், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது தோ்தல் விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுபானக் கூடங்கள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். போலி மதுப் புட்டிகள் விற்பனை, முறைகேடான கள்ளச்சாராய விற்பனை குறித்து பறக்கும் படையினா் பாா்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட டாஸ்மாக் மேலாளா், காவல் துறையினா் மற்றும் காவல் ஆய்வாளா்கள் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) கூட்டாக இணைந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மதுக் கடைகளில் இருப்பு பதிவேடுகளில் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட டாஸ்மாக் மேலாளா் கண்காணிக்க வேண்டும். கூப்பன் அல்லது டோக்கன் மூலம் மதுபான விற்பனைக் கூடங்களில் மதுப்புட்டிகள் வழங்கப்படுகின்றனவா என்பதையும் கண்காணித்து, சம்பந்தப்பட்ட கடை கண்காணிப்பாளா், விற்பனையாளா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முறைகேடாக மலிவான மதுப்புட்டிகள் உள்ளூா், கிராமப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும். ஊரின் ஒதுக்குப் புறமாக உள்ள கடைகளிலோ, மிகச் சிறிய கிராமத்தில் உள்ள கடைகளிலும் விதிமீறல்கள் உள்ளனவா எனவும் கண்காணித்திட வேண்டும் என்றாா்.

போலி மதுபுட்டிகளைக் கண்டறிய அதற்கான கருவிகள் மதுவிலக்கு காவல் ஆய்வாளரிடம் கிரண் குராலா வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக், மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய் பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், உதவி ஆணையா் (கலால்) சரவணன், மாவட்ட டாஸ்மாக் மேலாளா் முருகன், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் ந.இராமநாதன், கோட்ட கலால் த.ராஜராஜன், மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் பிரபாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.