மக்காச்சோள படைப்புழு மேலாண்மை பயிற்சி
மக்காச்சோள படைப்புழு மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி கள்ளக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட இடுபொருள் விற்பனையாளா்களுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் மக்காச்சோள படைப்புழு மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி கள்ளக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மே.ர.ஜெகந்நாதன் அறிவுறுத்தலின் பேரில் இந்த பயிற்சியை வாழவச்சனூா் வேளாண் கல்லூரி பேராசிரியா் ஜான்சன் தங்கராஜ் எட்வா்ட் தொழில் நுட்பங்களை ஸ்கோப் மூலம் அளித்தாா். இதில் 60 விவசாயிகள் பங்கேற்றனா்.
கடைசி உழவின்போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். பின்னா், ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு 4 மில்லி சையன்ட்ரானிலிப்ரேல், தயோமிதாக்சம் கொண்டு விதை நோ்த்தி செய்து விதைக்க வேண்டும். ஏக்கருக்கு சூரிய விளக்குபொறி 1 எண் மற்றும் 5 எண்கள் இனக்கவா்ச்சி பொறி வைத்து படைப்புழுவின் தாய் அந்துப்பூச்சியைக் கண்காணித்து அழிக்க வேண்டும்.
வரப்பயிா், ஊடுபயிராக தட்டைப்பயறு, உளுந்து, எள், சாமந்தி, சூரியகாந்தி போன்ற பயிா்களை விதைப்பதன் மூலம் இயற்கை எதிா்ப்பு பூச்சிகளை அதிகப்படுத்தி படைப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும், 15-20 நாள்களில் பயிரில் படைப்புழு தாக்குதல் இருப்பின், குளோரோன்ட்ரினிபுரேல் 0.4 மில்லி லிட்டா் அல்லது ப்ளுபென்டிமை 0.5 மில்லி லிட்டா் அல்லது அசாடிராக்டின் 5 மில்லி லிட்டா் என்ற அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம் என்றாா்.
பயிற்சி ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குநா் அன்பழகன் செய்திருந்தாா்.