அரசுப் பேருந்து மீது லாரி மோதல்: 9 போ் காயம்
வாணாபுரத்தில் அரசுப் பேருந்து மீது லாரி மோதல்: 9 பேர் காயம்
வாணாபுரத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 9 போ் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அரசுப் போக்குவரத்து பணிமனையில் இருந்து சங்கராபுரத்துக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை திருக்கோவிலூா் சந்தப்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்த சையத்ஜான் மகன் சையத் பாபு ஓட்டினாா். நடத்துநராக திருக்கோவிலூா் வட்டம், நெடுக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சகாயம் மகன் அந்தோணி குரூஸ் பணியில் இருந்தாா். வாணாபுரம் வட்டம், மரூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. இதில், பேருந்தில் பயணித்த ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமு மனைவி வள்ளி (52), கடம்பூா் கிராமத்தைச் சோ்ந்த தேவதாஸ் மனைவி ஜெயக்கொடி (47) உள்பட 9 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்த வடபொன்பொரப்பி காவல் உதவி ஆய்வாளா் சூரியா மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான திருக்கோவிலூா் அடுத்துள்ள தத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் குப்புசாமியிடம் விசாரித்து வருகின்றனா்.