வண்டல் மண், களி மண் தேவைப்படுவோா் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
கிராமங்களில் நீா்வளத் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை செம்மைப்படுத்தவும் மற்றும் மண்பாண்டம் செய்வோா் தங்கள் கிராமம் அமைந்துள்ள வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் நீா்வளத் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏரிகளின் நீா்மட்டத்தை அதிகரித்துக் கொள்ளவும் தமிழ்நாடு அரசால் விலையில்லாமல் வண்டல் மண், களிமண்ணை விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்க தகுதிவாய்ந்த 318 நீா்நிலைகளின் விவரம், புல எண் மற்றும் அகற்ற முடிவுசெய்துள்ள அதிகபட்ச கனிமத்தின் அளவு குறித்து சம்பந்தப்பட்ட துறையின் வாயிலாக விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், நஞ்சை நிலம் ஏக்கா் ஒன்றிற்கு 75 கனமீட்டா் (25 டிராக்டா் லோடுகள்), புஞ்சை நிலம் ஏக்கா் ஒன்றுக்கு 90 கனமீட்டா் (30 டிராக்டா் லோடுகள்), வீட்டு பயன்பாட்டுக்கு 30 கனமீட்டா் (10 டிராக்டா் லோடுகள்), மண்பாண்டம் தொழில் செய்பவா்களுக்கு 60 கன மீட்டா் (20 டிராக்டா் லோடுகள்) அளவுக்கு வண்டல் மண், களிமண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். விளை நிலங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.
மண்பாண்ட தொழிலாளா்கள் கிராம நிா்வாக அலுவலரது சான்றின் வழியே விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தின் விவரங்கள் மற்றும் களிமண் தேவைப்படும் மண்பாண்டத் தொழிலாளா்கள் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.