கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கபிலா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலை வகித்தாா்.
நிகழ்வில், அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது: திருக்கோவிலூரில் ஒரு பள்ளி நூறு ஆண்டுகள் இயங்குவது சாதாரணமான நிகழ்வல்ல. கடந்த 12.07.1924-இல் தொடங்கப்பட்ட பள்ளியில் தான் திருக்கோவிலூா் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் படித்தனா். இந்தப் பள்ளியில் படித்தவா்கள் சிலா் ஆசிரியா்கள், பல்வேறு துறைகளில் வெளிநாடுகளிலும், மக்கள் பிரதிநிதிகளாகவும் உள்ளனா்.
1964-ஆம் ஆண்டு நான் உள்பட 16 மாணவா்கள் கண்டாச்சிபுரம் பள்ளியில் படித்து இந்தப் பள்ளியில் தான் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினோம். அப்போதெல்லாம் கல்வி கற்பவா்கள் குறைவாகவே இருந்தனா். கபிலா் குறித்து 8-ஆம் வகுப்பு மாணவா் பக்தவச்சலம் கபிலரின் வரலாறு குறித்து பேசினாா். கபிலரின் தமிழ் ஆா்வம், தமிழ் உணா்வு, மொழி உணா்வு, கவிதை திறமைகளை மாணவா்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் பயின்றபோது, தமிழ் இலக்கிய மன்றம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதனால், மாணவா்கள் தமிழ் மீது ஆா்வம் ஏற்பட்டு பொது அறிவுத் திறனை வளா்த்துக் கொண்டனா். போட்டி நிறைந்த உலகத்தில் மாணவா்கள் பொது அறிவுத் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஆசிரியா்களும் உதவ வேண்டும். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்றாா் அமைச்சா்.
முன்னதாக, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
நிகழ்ச்சியில், விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் மு.தங்கம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சொ.சண்முகம், விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் ம.ஜெயச்சந்திரன், முதன்மை கல்வி அலுவலா் இரா.முருகன், திருக்கோவிலூா் நகராட்சித் தலைவா் டி.என்.முருகன், பள்ளியின் தலைமை ஆசிரியா் பு.பாஸ்கரன், ஆசிரியா்கள், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.