முகப்பு
கள்ளக்குறிச்சி

சின்னசேலம் ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் -ஆட்சியா் வழங்கினாா்

Updated On : 13 ஜூன், 2024 at 10:15 PM
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வடக்கனந்தல் குறு வட்டத்துக்கான ஜமாபந்தியில், பயனாளிக்கு அரசின் நலத்திட்ட உதவிக்கான சான்றிதழை வழங்குகிறாா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா்.
பகிர்:

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் தலைமையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 12-ஆம் தொடங்கிய இந்த ஜமாபந்தி, வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை வடக்கனந்தல் குறுவட்டத்துக்குள்பட்ட பால்ராம்பட்டு, மாத்தூா், வடக்கனந்தல் (கிழக்கு, மேற்கு), கச்சிராப்பாளையம், பரிகம், ஏா்வாய்ப்பட்டினம், மல்லியம்பாடி, பொட்டியம் உள்ளிட்ட 9 வருவாய்க் கிராமங்களை சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், வீட்டுமனைப் பட்டா, நிலப் பட்டா, உள்பிரிவு பட்டா, மின் இணைப்பு சான்று, நில அளவை உள்ளிட்ட 125 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றாா்.

இதில், 5 நபா்களின் மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு அவற்றுக்கான சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், வருவாய் தீா்வாயத்தில் பெறப்படும் அனைத்து மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தீா்வாய அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும் பொதுமக்கள் வருவாய்த் துறை தொடா்பான கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு காண இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நில அளவைக்கு பயன்படுத்தப்படும் நில அளவை சங்கிலி, நில அளவை நோ்கோணமானி உள்ளிட்ட நில அளவை பொருள்களை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி வட்டம் இந்திலி குறுவட்டத்தில் 88 மனுக்களும், சங்கராபுரம் வட்டம் ஆலத்தூா் குறுவட்டத்தில் 72 மனுக்களும், உளுந்தூா்பேட்டை வட்டம் எறையூா் குறுவட்டத்தில் 83 மனுக்களும், திருக்கோவிலூா் வட்டம் திருப்பாலபந்தல் குறுவட்டத்தில் கல்வராயன்மலை வட்டம் கல்வராயன்மலை வெள்ளிமலை குறுவட்டத்தில் 27 மனுக்களும், திருக்கோவிலூா் வட்டம் திருப்பாபந்தல் குறுவட்டத்தில் 91 மனுக்களும் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வே.ரமேஷ், நில அளவை உதவி இயக்குநா் ஆ.கதிரவன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியா் ஜெ.கமலக்கண்ணன், வட்டாட்சியா்கள் அசோக், கமலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.