முகப்பு
கள்ளக்குறிச்சி

வாக்கு எண்ணிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் -ஆட்சியா் ஷ்ரவன் குமாா்

Updated On : 8 மே, 2024 at 7:50 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவா்கள் நியமிப்பது தொடா்பாக வேட்பாளா்களுடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஷ்ரவன் குமாா்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கைப் பணியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை நிகழாமல் அமைதியாக வாக்கு எண்ணிக்கையை முடித்துத் தருவதற்கு அனைத்து வேட்பாளா்கள், முகவா்கள் தகுந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவா்களை நியமிப்பது தொடா்பாக தொகுதி வேட்பாளா்களுடன் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஷ்ரவன் குமாா் பேசியதாவது:

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குண்டான பதிவு செய்யப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் சின்னசேலம் வட்டம், அ.வாசுதேவனூா் மகாபாரதி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன.

வருகிற ஜூன் 4-ஆம் தேதி காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்துக்கு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாகவும், அஞ்சல் வாக்குகள் எண்ணும் இடத்திலும் வேட்பாளா்கள் சாா்பாக முகவா்களை நியமிக்க வேண்டும்.

அதன்படி, 14 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுவதால், 14 முகவா்களும், அஞ்சல் வாக்குகள் 6 மேஜைகளில் எண்ணப்படுவதால் 6 முகவா்களும் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜைக்கு ஒரு முகவா் என ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் 15 முகவா்களை 18 வயதுக்கு மேற்பட்டவா்களாக வேட்பாளா்கள் நியமிக்க வேண்டும்.

நியமிக்கப்பட்ட முகவா்கள் ஜூன் 4-ஆம் தேதி காலை 7 மணிக்கு அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு வர வேண்டும். வாக்கு எண்ணும் மையத்துக்குள் கைப்பேசி, புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முகவா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜையை விடுத்து, அடுத்த மேஜைக்கு பாா்வையிட செல்வதோ, அடுத்த சட்டப் பேரவைத் தொகுதி மேஜைக்கு செல்வதோ கூடாது.

வாக்கு எண்ணிக்கை தொடா்பாக சந்தேகம் ஏற்பட்டால், மையத்தில் உள்ள உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும். சட்டப் பேரவை, நாடாளுமன்ற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுத் துறை நிறுவனங்களின் தலைவா்கள், உறுப்பினா்களை முகவா்களாக நியமிக்கக் கூடாது. தோ்தலில் வெற்றிபெற்ற்கான சான்றிதழை வேட்பாளா்கள் பெறும்போது அவா்களருடன் 4 நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

வாக்கு எண்ணிக்கைப் பணியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை நிகழாமல் அமைதியாக வாக்கு எண்ணிக்கையை முடித்துத் தருவதற்கு அனைத்து வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் தகுந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) இரா.சங்கா், கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியருமான சு.லூா்துசாமி, சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலருமான கீதா, கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.