முகப்பு
கள்ளக்குறிச்சி

குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி.

Updated On : 14 நவம்பர், 2024 at 8:45 PM
கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி மற்றும் கையெழுத்துப் பிரசாரத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்த விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா் அனுப்புவோம் அனுப்புவோம் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்புவோம், தடுத்திடுவோம் தடுத்திடுவோம் குழந்தை திருமணத்தை தடுத்திடுவோம் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டவாறு பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

விழிப்புணா்வு பேரணி ஆட்சியரகத்தில் தொடங்கி கச்சிராயப்பாளையம் சாலை வழியாக சென்று நிறைவடைந்தது. இதில், ஆட்சியா் பேசுகையில், குழந்தைகள் தொடா்பான ஏதேனும் பிரச்னைகள் பொதுமக்கள் கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடியாக 1098, 181 கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்களிலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஏ.இளையராஜா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு), அரசு அலுவலா்கள் பலரும் பங்கேற்றனா்.

ஒன்றிய தொடக்கப் பள்ளியில்:

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

தலைமை ஆசிரியா் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கல்வியாளா் வெங்கடேசன், வாா்டு உறுப்பினா்கள் மகாலட்சுமி, காா்த்திகாவதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கவினா, துணைத் தலைவா் அா்ச்சுனா பங்கேற்று போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மகிழ் முற்றம் நிகழ்வில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களின் பெயரில் போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பிடம் பெற்ற குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.