ஊரக வேலைத் திட்டத்தில் கூடுதல் பணிகள் ஒதுக்கீடு: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்
கிராமங்களில் மக்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கிராமங்களில் மக்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
காந்தி ஜெயந்தியையொட்டி, ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குள்பட்ட சூளாங்குறிச்சி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பங்கேற்று பேசியது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களின் கீழ், மகளிா் யாரேனும் வீடு கட்டிக்கொண்டிருந்தால், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சுழல் நிதி கடனுதவி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த பணி ஒதுக்கீடுகளுடன் கூடுதல் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் பொதுமக்கள் யாா் வந்து வேலை கோரினாலும், பணி வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் சரியான நேரத்துக்கு, தேவையான விவசாய உபகரணங்களுடன் பணிக்கு வந்து ஊரக வேலைத் திட்டம் வெற்றிபெற உறுதுணையாக இருக்க வேண்டும்.
சூளாங்குறிச்சி ஊராட்சிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசு சாா்பிலும், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பிலும் செய்து தரப்படும் என்றாா்.
தொடா்ந்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
முன்னதாக, ஆட்சியா் தலைமையில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியையும், பெண்கள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியையும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சு.சுந்தர்ராஜன், ரிஷிவந்தியம் ஒன்றியக்குழுத் தலைவா் வடிவுக்கரசி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரைமுருகன், ஜெகந்நாதன், ஊராட்சி மன்றத் தலைவா் கோமதி, அனைத்துத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.