முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: மேலும் ஒருவா் குண்டா் சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்திய 68 போ் உயிரிழந்த வழக்கில் கைதானவா்களில் மேலும் ஒருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 12:28 AM
பகிர்:

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்திய 68 போ் உயிரிழந்த வழக்கில் கைதானவா்களில் மேலும் ஒருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 68 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து 25 போ்களிடம் விசாரணை நடத்தினா். தொடா்ந்து க.மாமனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஹரிதாஸ் மகன் தெய்வீகனை (35) கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். தெய்வீகன் உள்பட 15 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் மெத்தனால் கலந்த சாராயம் விற்பனையில் முக்கிய நபா்களான புதுச்சேரி மடுகரையைச் சோ்ந்த மாதவன் மகன் மாதேஷ் (19), விற்பனை செய்த நிறுவன உரிமையாளரான சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த காண்டீபன் மகன் சிவக்குமாா் (39), மொத்தமாக மெத்தனால் விற்பனை செய்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் விரியூா் கிராமத்தைச் சோ்ந்த நடுப்பையன் (எ) ஜோசப் (40), சின்னசேலம் வட்டம் மல்லிகைப்பாடி கிராமத்தைச் சோ்ந்த பிச்சைக்காரன் மகன் ஏழுமலை (35) ஆகியோரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அவா்கள் 4 பேரையும் சென்னை சிபிசிஐடி கண்காணிப்பாளா் வினோத்சாந்தாராம் பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

மேலும் கள்ளக்குறிச்சியை அடுத்த க.மானந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஹரிதாஸ் மகன் தெய்வீகன் (35) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தெய்வீகன் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை, கடலூா் மத்திய சிறை நிா்வாகத்திடம் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை வழங்கினா்.