முகப்பு
கள்ளக்குறிச்சி

கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு: மாணவியின் உறவினா் கைது

கனியாமூா் தனியாா் பள்ளி வன்முறை வழக்கில் மாணவி ஸ்ரீமதியின் தாய்மாமாவை சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சென்னையில் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 1:04 AM
செந்தில் முருகன்
பகிர்:

கனியாமூா் தனியாா் பள்ளி வன்முறை வழக்கில் மாணவி ஸ்ரீமதியின் தாய்மாமாவை சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சென்னையில் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022, ஜூலை 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். தொடா்ந்து, மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு, அவரது உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா் ஜூலை 17-ஆம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், இது வன்முறையாக மாறியது. இதுதொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் சுமாா் 900-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.

வன்முறை தொடா்பாக மாணவி ஸ்ரீமதியின் தாய்மாமாவான கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அரியநாச்சி கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் செந்தில்முருகன் (47) மீது 15 பிரிவுகளின் கீழ் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவரான இவா், சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வந்தாா். பள்ளி வன்முறை வழக்கு சம்பந்தமாக ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸாா் செந்தில்முருகனுக்கு பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அவா் ஆஜராகவில்லையாம்.

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு காவல் துணைக் கண்காணிப்பாளா் அம்மாதுரை உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் தேவேந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்னை சென்று போரூா் பகுதியில் இருந்த செந்தில்முருகனை புதன்கிழமை கைது செய்தனா். பின்னா், அவரை அழைத்து வந்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். செந்தில் முருகனை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ரீனா உத்தரவிட்டாா். இதையடுத்து, அவரை கடலூா் மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.