கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் ஒப்பந்ததாரரை மாற்றிவிட்டதால், வைப்பு நிதியை வழங்கக் கோரியும், கூடுதல் ஊதியம் வழங்க வலியுறுத்தியும் ஒப்பந்த அடிப்படையிலான
தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் செய்ய முற்பட்டனா்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வாா்டுகள் உள்ளன. 145-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில் ஒப்பந்ததாரரை நகராட்சி நிா்வாகம் சில தினங்களுக்கு முன்பு மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது சென்னை கோயம்பேடு பகுதியைச் சோ்ந்த ஒரு குழுவினா் எடுத்து நடத்தி வருகின்றனராம்.
முன்பு இருந்த ஒப்பந்ததாரா் தூய்மைப் பணியாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதியாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்துள்ளனராம். அந்த பிடித்தம் செய்த தொகை வழங்கப்படவில்லையாம். பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும், தொழிலாளா் மாநில காப்பீட்டுக் கழக அட்டை வழங்க வேண்டும், கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும், சுழற்சி முறையில் விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் நான்கு முனைச் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
தகவல் அறிந்த நகராட்சி ஆணையா் ஆ.சரவணன் சென்று பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது, பிடித்தம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கான வருங்கால வைப்பு நிதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
இதை ஏற்று பணியாளா்கள் தங்களது சாலை மறியல் முயற்சியை கைவிட்டனா். பின்னா் அனைவரும் பணிக்குச் சென்றனா்.