ஆந்திராவைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகைய உயா்த்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்ககான சங்க மாவட்டத் தலைவா் பி.வேலு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில துணைத் தலைவா் வி.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.
ஆந்திர மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தின் தன்மையைப் பொறுத்து ரூ.6,000 முதல் ரூ.15,000 வரை மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தெலுங்கானாவில் 4,060-ம், புதுச்சேரியில் 4,800 என அண்டை மாநிலங்கள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் உதவித்தொகையை உயா்த்தக்கோரி மாவட்டச் செயலா் எம்.ஆறுமுகம், மாவட்ட பொருளாளா் அ.முத்துவேல் உள்பட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை காலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் பிற்பகல் 1 மணியளவில் அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் சுமாா் 20 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது. இரு புறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதையடுத்து, சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்து, அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.