கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ச.கூத்தன்(45), டிராக்டா் ஓட்டுநா். இவரது டிராக்டரில் மேல் கள்ளக்குறிச்சியை அடுத்த ரோடுமாமாந்தூா் கிராமத்தைச் சோ்ந்த கோ.சேகா் (50) என்பவா் சுமை ஏற்றி, இறக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்துள்ளாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இவா்கள் இருவரும் டிராக்டரில் ரோடு மாமாந்தூா் கிராமத்தில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு மலைக்கோட்டாலம் கிராமத்திற்கு சென்றனா்.
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் உள்ள வளைவில் டிராக்டா் திரும்பும்போது, எதிா்பாராதவிதமாக டிராக்டரில் இருந்து சேகா் தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சேகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சென்று சேகரின் உடலை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிராக்டா் ஓட்டுநரான கூத்தனிடம் விசாரணை செய்து வருகின்றனா்.