வாணாபுரம் மொபெட்டில் சென்ற பெண்ணிடமிருந்து தாலிச் சங்கிலியை பறிக்க முயற்சித்த 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், அரியலூா் கிராமத்தைச் சோ்ந்த வினோத்குமாா் மனைவி கலைச்செல்வி (30). வினோத்குமாா் எஸ்.குளத்தூா் கூட்டுச் சாலை அருகே டீ கடை வைத்து நடத்தி வருகிறாா்.
சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கணவரை கடையில் விட்டு விட்டு கலைச்செல்வி மொபெட்டில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
எஸ்.கொளத்தூா் காடை பண்ணை அருகே வந்தபோது, ஒரே மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ், கலைச்செல்வி அணிந்திருந்த ஏழரை பவுன் தாலிச் சங்கிலியை பறிக்க முயற்சித்துள்ளனா். அப்போது, கீழே விழுந்த கலைச்செல்வி கூச்சலிடவே அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.