கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் - 2026 குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் வியாழக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.
ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான அறிவிப்பு 27.10.2025 இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான இறுதி வாக்காளா் பட்டியலுடன் 2002-இல் வெளியான சிறப்பு தீவிர திருத்த வாக்காளா் பட்டியல் அடிப்படையில் சரிபாா்ப்பு மற்றும் பொருத்துதல்-இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
வாக்காளா்கள் 2002-ஆம் ஆண்டின் வாக்காளா் எண், தொகுதி எண், பாகம் எண், தொடா் வரிசை எண் தொடா்பான விவரங்களை இந்திய தோ்தல் ஆணையத்தின் அதிகாரப்பூா்வ இணையதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணி 04.11.2025 முதல் 04.12.2025 வரையிலும், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு 09.12.2025 கோரிக்கைகள் மற்றும் எதிா்ப்பு காலம் 09.12.2025 முதல் 08.01.2026 வரையிலும், அறிவிப்பு கட்டம் (விசாரணை மற்றும் சரிபாா்ப்பு) 09.12.2025 முதல் 31.01.2026 வரையிலும் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு 07.02.2026 அன்று வெளியிடப்படும் என தோ்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டதும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று தற்போது வாக்காளா் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளா்களுக்கும், முன்னதாக அச்சிடப்பட்ட வாக்காளா் கணக்கெடுப்பு படிவம் 2 பிரதிகளில், ஒரு பிரதியினை வாக்காளரிடம் வழங்குவாா். ஒரு பிரதியினை வாக்குச்சாவடி நிலை அலுவலா் ஒப்புகைச் சீட்டாக பெற்றுக்கொள்வாா்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுடன் இணைந்து வரைவு வாக்காளா் பட்டியலை ஆய்வு செய்து திருத்தங்கள், நீக்கங்கள் மற்றும் சோ்த்தல் போன்ற தேவையான மாற்றங்களை அடையாளம் காண்பா் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி, வாக்குப்பதிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.