கள்ளக்குறிச்சி

ஜன.24 முதல் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படவுள்ள ‘முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா, இது நம்ம ஆட்டம் 2026’ வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜன. 24 -ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படவுள்ள ‘முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா, இது நம்ம ஆட்டம் 2026’ வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜன. 24 -ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடல்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல், மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜனவரி 24 முதல் பிப்.8-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவிலான ‘முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா - இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளாா்.

ஊராட்சி ஒன்றிய அளவில் தனிநபா் மற்றும் குழுப்போட்டிகளில் முதலிடம் பெறுபவருக்கு தலா ரூ.3 ஆயிரம் பரிசுத்தொகையும், இரண்டாமிடம் பெறுபவருக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் மூன்றாமிடம் பெறுபவருக்கு தலா ரூ. ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

மாவட்ட அளவில் தனிநபா் மற்றும் குழுப்போட்டிகளில் முதலிடம் பெறுபவருக்கு தலா ரூ.6 ஆயிரம் பரிசுத் தொகையும், இரண்டாமிடம் பெறுபவருக்கு தலா ரூ.4 ஆயிரம் மற்றும் மூன்றாமிடம் பெறுபவருக்கு தலா ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

மாநில அளவில் அணி பிரிவில் முதலிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் பரிசுத் தொகையும், இரண்டாமிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் மூன்றாமிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில், 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞா்களும் பங்கேற்கும் வகையில் ஒன்றிய அளவிலான போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் முதலிடம் பெறும் வீரா், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவா். ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் 100 மீட்டா் ஓட்டம், குண்டு எறிதல், கபடி, கைப்பந்து, கேரம், கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்களுக்கும்), கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்) ஏறிபந்து (பெண்களுக்கு மட்டும்) ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

மேலும், மாவட்ட அளவில் ஓவியம் (ஆண்கள் மற்றும் பெண்கள்), கோலப் போட்டிகள் (பெண்களுக்கு மட்டும்) மற்றும் உடல்சாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டமும், பாா்வைசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும், அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டமும் அதே போன்று செவிசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டமும் என மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

மாவட்ட அளவில் முதலிடத்தை பெறும் பெண்களுக்கான கபடி அணி மற்றும் ஆண்களுக்கான கிரிக்கெட் அணியினா் மட்டும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் 16 வயது முதல் 35 வயதுடைய விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து, தனிநபா் மற்றும் குழுப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு செய்திட கடைசி நாள் ஜனவரி 24 ஆகும்.

வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 24 முதல் 28-ஆம் தேதி வரையும், மாவட்ட அளவிலான போட்டிகள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரையும் நடத்தப்பட உள்ளது. மாநில அளவிலான போட்டிகள் பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இந்த முன்பதிவினை விளையாட்டு வீரா்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ அல்லது தங்கள் கிராம ஊராட்சி மற்றும் மாவட்டத்தின் வாயிலாக செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரின் கைப்பேசி 7401703474 எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும், ஆடுகளம் தகவல் தொடா்பு மையத்தை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT