முகப்பு
புதுச்சேரி

புதுவையில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது எப்படி?

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸýக்கு 4.07 வாக்கு சதவீதம் அதிகரித்ததே அந்தக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றக் காரணமாக அமைந்துள்ளது.

Updated On : 22 மே, 2016 at 3:40 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:49 PM

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸýக்கு 4.07 வாக்கு சதவீதம் அதிகரித்ததே அந்தக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றக் காரணமாக அமைந்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 85.07 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் உள்ள 9,41,395 வாக்காளர்களில் 7,91,511 பேர் வாக்களித்தனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3.68 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 4.22 லட்சம் பேரும் அடங்குவர். பெண் வாக்காளர்கள் 53.52 சதவீதமும், ஆண் வாக்காளர்கள் 46.48 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.

கடந்த 2011-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலின் போது 6.77 லட்சம் வாக்காளர்களில் 5.8 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்தனர். அப்போது 86.11 சதவீதம் வாக்குகள் பதிவானது. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 9 லட்சம் வாக்காளர்களில் 7.39 லட்சம் பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 82.14. இது கடந்த பேரவைத் தேர்தலைக் காட்டிலும் 2.11 சதவீதம் குறைவாகும்.

Advertisement

கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம்: 2016ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம் வருமாறு:

இந்திய தேசிய காங்கிரஸ் 30.6 சதவீதம், என்.ஆர். காங்கிரஸ் 28.12 சதவீதம், அதிமுக 16.82 சதவீதம், திமுக 8.85 சதவீதம், பாஜக 2.41 சதவீதம், கம்யூனிஸ்ட் கட்சிகள் 1.07 சதவீதம், சுயேச்சைகள் 7.86 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளன.

2011 பேரவைத் தேர்தலில் வாக்கு விகிதம்: இந்திய தேசிய காங்கிரஸ் 26.53 சதவீதம், என்.ஆர். காங்கிரஸ் 31.75 சதவீதம், அதிமுக 13.75 சதவீதம், திமுக 10.68 சதவீதம், பாஜக 1.32 சதவீதம், இந்திய கம்யூனிஸ்ட் 0.94 சதவீதம், சுயேச்சைகள் 10.12 சதவீதம்.

காங்கிரஸ் வாக்கு விகிதம் 4.07% அதிகரிப்பு: கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தலைக் காட்டிலும் தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு விகிதம் 4.07 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாக்கு விகிதம் 3.63 சதவீதம் சரிந்துள்ளது. அதேநேரத்தில், அதிமுகவின் வாக்கு விகிதம் 3.07 சதவீதம் கூடுதலாகி உள்ளது.

ஆனால் ஏற்கெனவே முந்தைய தேர்தலில் தான் பெற்ற 2 தொகுதிகளைத் தக்கவைத்துக் கொண்டாலும், திமுகவின் வாக்கு விகிதம் 1.83 சதவீதம் குறைந்துவிட்டது.

ஒரு தொகுதியைக்கூட வெல்லாத நிலையில் பாஜக 1.09 சதவீதம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.13 சதவீதம் வாக்கு விகிதம் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸýக்கு 15 தொகுதிகள்: தற்போது நடைபெற்ற பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் 15, என்ஆர். காங்கிரஸ் 8, அதிமுக 4, திமுக 2, சுயேச்சை 1 என வெற்றி பெற்றுள்ளன. பெரும்பான்மைக்கு கூடுதலாக 1 தொகுதி தேவையான நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிக் கட்சியான திமுகவின் ஆதரவு உள்ளது. மேலும், ஆளும் கட்சி சார்பில் பேரவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.