புதுச்சேரி

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: கானல் நீராகும் மாணவர்களின் மருத்துவக் கனவு

 நமது நிருபர்

உச்ச நீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக புதுச்சேரி மாநில மாணவர்களின் மருத்துவக் கனவு கானல் நீராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. நீட் தேர்வு வினாக்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன. இதனால், தமிழக பாடத் திட்டத்தில் பயின்ற புதுவை மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

எனவே, நீட் தேர்வில் இருந்து 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என புதுவை அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்பியது. எனினும் மத்திய அரசு அதை ஏற்கவில்லை.

இந்த நிலையில், புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள பள்ளிக் கல்வித் துறை சார்பில், பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்தது.

அதன்படி, புதுச்சேரியில் 120 பேர், காரைக்காலில் 120 பேர் என மொத்தம் 240 பேருக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.

கடந்த மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. புதுச்சேரியில் மொத்தம் 4,196 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அதில் 1,586 பேர் (37.79 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில், புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் 545 முதல் 300 மதிப்பெண்கள் வரையும், தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 400 முதல் 200 வரையும் மதிப்பெண்கள் பெற்றனர்.

ஆனால், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 200-க்கும் குறைவான மதிப்பெண்களே பெற்று தேர்ச்சி பெற்றனர். இதனால், அவர்கள் மற்ற மாணவர்களுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்கும் வகையில், புதுவை அரசு உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

தமிழக அரசும் மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீதம் ஒதுக்கி அரசாணை பிறப்பித்தது.

ஆனால், இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றமும் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனால், தமிழகத்தைப் போலவே மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்ற புதுச்சேரி மாநில மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவு கானல் நீராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி, தமிழக மாநில அரசுகள் நீட் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு பெற எடுத்து முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன.

நீட் தேர்வில் இருந்து ஓராண்டாவது விலக்கு வழங்க வேண்டும் என தமிழக, புதுவை அரசுகள் முயன்ற நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT