புதுச்சேரி

அரசுப் பள்ளி கட்டட விபத்து: 2 பேர் கைது

தினமணி

அரசுப் பள்ளி கட்டட விபத்து தொடர்பாக பொக்லைன் ஓட்டுநர்கள் 2 பேரை வில்லியனூர் போலீஸார் கைது செய்தனர்.
 புதுச்சேரியை அடுத்த வில்லியனூரை அருகே தொண்டமாநத்தம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆபத்தான நிலையில் இருந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட பொதுப் பணித்துறை சிறப்புக் கட்டடங்கள் கோட்டம் -2 மூலம், ரூ.19 லட்சத்து 34 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
 இதற்கான ஒப்பந்தத்தை உருளையன்பேட்டையைச் சேர்ந்த பாண்டியன் எடுத்திருந்தார். கட்டடங்களை இடிக்கும் பணி கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. பொக்லைன் உதவியுடன் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது.
 இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி நேரம் முடிந்து மாணவர்கள் வீட்டுக்குச் சென்றனர். அப்போது இரண்டு கட்டடத்துக்கு இடையில் இருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டால் மாணவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், இடிக்கும் கட்டடத்தில் இருந்து குடிநீர் தொட்டியை இடிக்காத கட்டடத்துக்கு மாற்றி வைப்பதற்காக பள்ளியின் கண்காணிப்பாளர் சிவபாரதி (52), பல்நோக்கு ஊழியர்கள் ரமணன் (55), அய்யனார் (58), மதிவாணன் ( 35) ஆகியோர் தொட்டியை அப்புறப்படுத்தச் சென்றனர்.
 அப்போது, சிவபாரதி பொக்லைன் இயந்திர ஓட்டுநர் பிரகாஷிடம் சிறிது நேரம் பொக்லைன் இயந்திரத்தை இயக்காமல் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். பின்னர் 4 பேரும் தொட்டியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 ஆனால், சிவபாரதி கூறியதை சரியாக காதில் வாங்காத பொக்லைன் ஓட்டுநர் பிரகாஷ் பொக்லைனை இயக்கியதாகத் தெரிகிறது. இதனால் கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரில் சிவபாரதி, அய்யனார் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 இது குறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பொக்லைன் ஓட்டுநர்கள் பிரகாஷ், குருமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கட்டட ஒப்பந்ததாரர் பாண்டியன், மேற்பார்வையாளர் குணசேகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT