பாகூர், வில்லியனூர், உழவர்கரை, புதுச்சேரியில் துணை தாலுகா அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப் பேரவையில் வருவாய், தொழில் வணிகம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், வனம், சிறுபான்மையினர் விவகாரம் உள்ளிட்ட துறைகள் தொடர்பான மானிய விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் எப்.ஷாஜஹான் புதன்கிழமை பேசியதாவது:
மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்பவும், வருவாய்த் துறையில் உள்ள பணிச்சுமையை கருத்தில் கொண்டும் பெரிய வருவாய் கிராமங்களைப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
21 வருவாய் கிராமங்களைக் கொண்டு புதுச்சேரி தாலுகா, 8 வருவாய் கிராமங்கள் உடைய உழவர்கரை தாலுகா, 31 வருவாய் கிராமங்கள் உடைய வில்லியனூர், 23 வருவாய் கிராமங்கள் உடைய பாகூர் தாலுகாக்களில் தலா ஒரு துணை தாலுகா அலுவலகம் அமைக்கப்படும்.
மேலும், தேவையான வருவாய்த் துறை அதிகாரிகள் பணியிடம் உருவாக்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதி முன்வரைவு சமர்ப்பிக்கப்படும். அதுவரை, தேவையான வருவாய் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு மக்களுக்கான சேவைகள் விரைந்து தரப்படும்.
நவீன தொழில்நுட்பத்தில் மறு அளவை பணி: நவீன நில அளவை தொழில்நுட்பத்தில் மறு அளவைப் பணிகள் தொடங்க உள்ளன. நிலப்பதிவேடுகள் பதிவக பதிவேடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு பட்டா பெயர் மாற்றம் விரைவில் செய்யப்படும்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். பேரிடர் காலங்களுக்கு தேவையான தகவல் தொடர்புச் சாதனங்கள், பறக்கும் வாகனங்கள், பெறப்படும். மாஹே, ஏனாம் துணை தாலுகாக்கள், தாலுக்களாக தரம் உயர்த்தி வட்டாட்சியர் நியமிக்கப்படுவர்.
தீ விபத்து நிவாரணம் உயர்வு: தீவிபத்தில் பாதிக்கப்படும் வீடுகளுக்கான நிவாரணத் தொகை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
காரைக்காலில் பிஆர்டிசி பணிமனை: காரைக்காலில் பேருந்துகளை பராமரிக்க நவீன தொழில்நுட்பத்துடன் ஒரு பணிமனை நிறுவப்படும்.
காரைக்காலில் இருந்து சென்னைக்கும், மாஹேயில் இருந்து பழைய பேருந்துக்கு பதிலாக புதிய சொகுசு பேருந்தும், கூடுதலாக ஒரு பேருந்தும் இயக்கப்படும். புதுவை-கோவை, சேலம், வேலூர், காரைக்கால்-திருச்சி (வழி திருவாரூர், தஞ்சாவூர்) பேருந்துகள் இயக்க அனுமதி பெறப்படும்.
பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்படும். புதுச்சேரி நகர்ப்புற போக்குவரத்து முகமை சார்பில் 27 வழித்தடங்களில் 54 சிற்றுந்துகளும், காரைக்காலில் 8 வழித்தடங்களில் 16 சிற்றுந்துகளும் இயக்கப்படும்.
ரூ.65.1 கோடியில் 112 தொழில்நிறுவனங்கள் தொடக்கம்: புதிய தொழில் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 112 தொழில் நிறுவனங்கள் ரூ.65.10 கோடியில் துவக்கப்பட்டு 1070 பேருக்கு வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது. தொழில் தொடங்க 1425 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது.
தொழில் துறை தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிய தொழிலக தகவல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒற்றைச் சாளர முறையில் அனுமதி, தகவல் உதவி மையம் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டன.
ஏஎப்ஃடி, சுதேசி பஞ்சாலைகளை புனரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிலாளர்களுக்கு 50 சதவீத தொழில் ஈட்டுப்படியை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கதர் வாரிய மேம்பாட்டுக்காக நெட்டப்பாக்கம், மணப்பட்டு, வில்லியனூர், ஆலங்குப்பம், வைத்திக்குப்பத்தில் மண்டல அலுவலகங்கள் அமைக்கப்படும்.
ஆலங்குப்பத்தில் கைவினைக் கலைஞர்கள் கிராமம் உருவாக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் ஐடி பினிஷிங் ஸ்கூல் திட்டத்தில் 7000 பேருக்கு பயிற்சி தரப்பட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
500 அரசு அதிகாரிகளுக்கு ஆபிஸ் ஆட்டோமேஷன் பயிற்சி, 100 அதிகாரிகளுக்கு மின் ஆளுமை திட்ட பயிற்சியும் தரப்படும்.
வனத்துறையில் ரூ.1.58 கோடி செவில் ஊசுட்டேரியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். வனமேலாண்மைப் பணி ரூ.60.77 லட்சத்திலும், வனவிலங்கு வசிப்பிட மேம்பாடு ரூ.10 லட்சத்திலும் செய்யப்படும்.
100 எக்டேரில் சதுப்பு நிலக்காடுகள்: இயற்கைச் சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் புதுவை, மாஹே, ஏனாம், காரைக்காலில் 100 ஹெக்டேர் நிலப்பரப்பில் புதிதாக சதுப்பு நிலக்காடுகள் உருவாக்கப்படும்.
சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம்: தனியாக சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்படும். வக்ஃபு வாரியம் மூலம் கல்வி உதவித் தொகை மானியத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்களது பெற்றோரின் ஆண்டு வருவாய் உச்ச வரம்பு ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.