புதுச்சேரி

தேசிய விதைக்கழகத்திடம் மட்டுமே விதைகள் வாங்க வேண்டும்: அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தல்

தினமணி

தரமான விதைகளை தேசிய விதைக் கழகத்திடம் மட்டுமே வாங்கி விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டார்.
 வேளாண்மைத் துறை சார்பில் நிகழ் நிதியாண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் தட்டாஞ்சாவடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 வேளாண் துறை இயக்குநர் ராமமூர்த்தி வரவேற்றார். அரசுச் செயலாளர் டி.மணிகண்டன் முன்னிலை வகித்தார். அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.
 கூடுதல் வேளாண் இயக்குநர்கள் ரவிப்பிரகாசம், ஜெய்சங்கர், கேவிகே முதல்வர் பாலகாந்தி, காரைக்கால் கூடுதல் இயக்குநர் மதியழகன், வேளாண் கல்லூரி டீன் கந்தசாமி, நீர் நிலவியலாளர் மனோகர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 கடந்த 2016-17-ல் வேளாண் துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செலவு செய்யப்பட்ட தொகை மற்றும் பயன் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தனர்.
 ஒவ்வொரு சிக்கலிலும் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது குறித்து, விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள் தரமானதாகவும், காலத்தோடும் கிடைப்பதை உறுதி செய்தல், விவசாயிகள் பயன் பெறும் வகையில் திட்டங்களில் மாற்றல் கொண்டு வருதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
 மத்திய அரசுத் திட்டங்கள், தேசிய தோட்டக்கலைத் திட்டம், தென்னை வாரிய திட்டங்கள், ஆத்மா திட்டம், குறித்து அதிகாரிகள் விளக்கினர். மத்திய அரசிடம் இருந்து அதிகபட்ச நிதி பெற்று, மாநில அரசு நிதியுடன் இணைத்து செலவிடவும் தீர்மானிக்கப்பட்டது.
 கூட்டத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:
 தரமான விதைகளை மத்திய அரசின் தேசிய விதைக்கழகம் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குகிறது. அவ்வாறு இருக்கும் போது, நீங்கள் ஏன் தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், முகமைகளிடம் வாங்குகிறீர்கள். தேசிய விதைக்கழகத்திடம் மட்டுமே புதுவை வேளாண் துறை நெல், மணிலா விதைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
 பாசிக், விதை சான்றளிப்பு துறை உள்ளிட்டவை அரசு அனுமதி இன்றி தன்னிச்சையாக செயல்படக் கூடாது. அரசூரில் பயன்பாடின்றி உள்ள உரம் தயாரிக்கும் இயந்திரங்களை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தேவைக்கு அதிகமாக நுண்ணூட்டச்சத்து உரங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என்றார்.
 அரசுச் செயலர் மணிகண்டன் பேசுகையில், தேசிய விதைக்கழக அதிகாரிகளுடன் பாசிக் அதிகாரிகள் கலந்து பேசி, விதைகள் கொள்முதல் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்க வேண்டும். பாசிக் செயல்பாடுகள் குறித்து தனது கவனத்துக்கு அடிக்கடி தெரிவிக்க வேண்டும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT