புதுச்சேரி

வங்கிக் கடனை நேர்மையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும்: மத்திய அமைச்சர்அசோக் கஜபதி ராஜு

DIN

பொதுமக்கள் வங்கிகளில் பெறும் கடனை நேர்மையாகத் திருப்பிச் செலுத்தி, நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறினார்.

வங்கிகள் கூட்டமைப்பு சார்பில், புதுச்சேரி கம்பன் கலையரங்கில் முத்ரா சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதமரின் முன்னோடித் திட்டமான முத்ராவில் நிகழாண்டு ரூ. 208 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை சிஷு பிரிவில் 7,012 பேருக்கும், கிஷோர் பிரிவில் 2,820 பேருக்கும், தருண் பிரிவில் 257 பேருக்கும் என மொத்தம் 10,089 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக சிறப்பு முகாம் நடைபெற்றது.

புதுவை தலைமைச் செயலர் மனோஜ் பரிதா வரவற்றார். எம்.எல்.ஏ. ஆ.அன்பழகன், இந்தியன் வங்கி மேலாண் இயக்குநர் கிஷோர் காரத் முன்னிலை வகித்தனர்.

முகாமுக்கு புதுவை முதல்வர் வி.நாராயணசாமி தலைமை வகித்தார். நிகழ்வில், மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜு பயனாளிகளுக்கு கடனுதவியை வழங்கிப் பேசியதாவது: இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது பலம்.

பல ஆண்டுகளாக அனைவருக்கும் வங்கிச் சேவை என்பது கிடைக்காத நிலை இருந்தது. 4 ஆண்டுகளுக்கு முன் வங்கியில் கணக்குத் தொடங்குவது மிகுந்த சிரமமாக இருந்தது. ஆனால், மத்திய அரசின் முயற்சியால் அனைவருக்கும் தற்போது வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, அனைத்துக் காப்பீடு திட்டங்கள், எழுந்திரு இந்தியா, முத்ரா திட்டம், ஓய்வூதியத் திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

உலகம் முழுவதும் சுற்றுலாதான் அதிக வேலைவாய்ப்பைத் தருகிறது. கலை, மொழி, கலாசாரத்தில் இந்தியா சிறப்புற்று விளங்குகிறது. விமான சேவை இணைப்பு என்பது மிக முக்கியமானதாகும்.

இந்தியா சுதந்திரம் பெற்று இதுவரை 70 விமான நிலையங்களே இயங்கி வரும் நிலை தொடர்கிறது. இதற்காக மாற்று ஏற்பாட்டைச் செய்தோம்.

மாநில அரசுகளுடன் இணைந்து உதான் திட்டத்தைச் செயல்படுத்தினோம். 32 நகரங்களுக்கு இணைப்பு ஏற்படுத்தினோம். அனைத்து இந்தியர்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

அப்போதுதான் இந்தியா முன்னேற்றம் அடையும்.

எந்தத் திட்டமானாலும் நேர்மையாகச் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தனி நபர்கள், குடும்பத்தினர், நாட்டின் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்றார் அமைச்சர் கஜபதி ராஜு.

நிகழ்வில் புதுவை முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளும் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடன் வழங்க முகாம்களை நடத்தி வருகின்றன.

புதுச்சேரியில் இந்த ஆண்டு ரூ. 208 கோடிக்கு 266 வங்கிகள் இணைந்து சுய தொழில் தொடங்க முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கின்றன. 13 லட்சம் பேர் புதுவையில் தனிக் கணக்குத் தொடங்கியுள்ளனர்.

முத்ரா திட்டத்தின் மூலம் கடன் பெறுவோர் தொழில் தொடங்கி, பலருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.

வங்கிகளில் 30 சதவீதம் மட்டுமே கடன் தருகின்றனர். சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களை வங்கிகள் மறந்து விடுகின்றனர். அரசுப் பள்ளிகள், நிறுவனங்களுக்கு வங்கிகள் உதவி செய்யலாம். கல்வி கற்கத் தேவையான உபகரணங்கள் போன்றவற்றை வாங்க 3 சதவீதம் நிதியைத் தரலாம்.

புதுச்சேரியில் விமான சேவையை குறுகிய காலத்தில் தொடங்க அனுமதி அளித்த மத்திய அமைச்சருக்கு நன்றி. புதுவை - திருப்பதி, பெங்களூரு, கோவை, கொச்சி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவையைத் தொடங்க முன்வர வேண்டும்.

விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தைத் தமிழகத்தில் இருந்து பெற மத்திய அமைச்சர் உதவி புரிய வேண்டும். சென்னை விமான நிலையத்தில் தற்போது நெரிசல் ஏற்படுகிறது. புதுவையில் சரக்கு விமான போக்குவரத்தையும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

முத்ரா சிறப்பு முகாமில் அனைத்து வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், நபார்டு வங்கி அரங்குகள் இடம் பெற்றிருந்தன. மேலும், மின்னணு பணப் பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பீம் செயலி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டன.

ஆதார் எண் பதிவு செய்தல், இணைத்தல், புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இணைதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் முகாமில் வழங்கப்பட்டன.

நிதித் துறை செயலர் கந்தசாமி, நூற்றுக் கணக்கான மகளிர் சுய உதவிக் குழுவினர், வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், பங்கேற்றனர். நிகழ்வில், மொத்தம் 1,500 பேருக்கு முத்ரா கடன் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT