காரைக்கால் பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்
புதுவை பள்ளிக் கல்வி இயக்குநரின் எச்சரிக்கையையும் மீறி புதுச்சேரியில் காரைக்கால் பட்டதாரி ஆசிரியர்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை பள்ளிக் கல்வி இயக்குநரின் எச்சரிக்கையையும் மீறி புதுச்சேரியில் காரைக்கால் பட்டதாரி ஆசிரியர்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை மாநிலம், காரைக்காலில் பணியாற்றி வரும் புதுச்சேரியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது புதுச்சேரிக்கு பணியிடமாற்றம் வழங்குதல், தலைமை ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30 முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து பள்ளிகள் திங்கள்கிழமை திறந்த நிலையில் அவர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து கல்வித்துறை முன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து அனுமதியின்றி விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை இயக்குநர் குமார் அறிவித்திருந்தார்.
இருப்பினும் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்த காரைக்கால் பட்டதாரி ஆசிரியர்கள் திங்கள்கிழமை காலை கல்வித்துறை அருகே தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எச்சரிக்கையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.