முகப்பு
புதுச்சேரி

ஏடிஎம் பண மோசடி வழக்கு: சிபிசிஐடி விசாரணை அதிகாரி மாற்றம்

ஏடிஎம் அட்டை மூலம் பண மோசடி செய்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி திடீரென மாற்றம் செய்யப்பட்டார்.

Updated On : 15 மே, 2018 at 4:38 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

ஏடிஎம் அட்டை மூலம் பண மோசடி செய்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி திடீரென மாற்றம் செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் பலரது வங்கிக் கணக்கில் இருந்து அண்மைக்காலமாக பணம் மாயமானது. இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், இதில் தொடர்புடையவர்களைப் பிடிக்க சிபிசிஐடிக்கு புதுவை காவல் துறை இயக்குநர் சுனில்குமார் கெளதம் உத்தரவிட்டார்.
சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், லாஸ்பேட்டை லட்சுமி நகரில் வசிக்கும் பல்கலைக்கழக ஊழியர் பாலாஜி, கணினி மையம் நடத்தி வரும் முருங்கம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஏடிஎம் இயந்திரங்களில் நவீன கருவியை பொருத்தி தகவல்களை திருடி பின்னர் ஸ்வைப் இயந்திரம் மூலம் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, சென்னை கொளத்தூரை சேர்ந்த ஷியாம், காராமணிக்குப்பத்தை சேர்ந்த கமல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் அதிமுக பிரமுகர் சந்துருஜி, முதலியார்பேட்டையைச் சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்தியா ஆகியோரும் தேடப்பட்டு வருகின்றனர்.
அதிமுக பிரமுகர் சந்துருஜியின் வங்கிக் கணக்கில் இருந்து அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்துருஜி கைது செய்யப்பட்டால்தான் இவர்கள் எந்த வகையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவரும்.
தற்போது சந்துருஜியின் செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் சிம் கார்டை மாற்றி மாற்றி போட்டு வந்தாலும் செல்லிடபேசி ஐஎம்இ எண் மூலம் அவர் இருக்கும் இடம் குறித்து போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது.
செல்லிடப்பேசியின் எண் திருச்சி, கரூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள கோபுரங்களில் மாறி மாறி காட்டுவதால் இந்தப் பகுதிகளுக்கு போலீஸார் சென்றுள்ளனர்.
தொடர்ந்து முக்கிய எதிரிகளை கைது செய்ய காலதாமதம் ஆகி வரும் நிலையில், விசாரணை அதிகாரியாக இருந்த காவல் ஆய்வாளர் பழனிவேலை பணியிட மாற்றம் செய்து காவல் துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக புதிய விசாரணை அதிகாரியாக சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில், சந்துருஜியின் பெற்றோரும் தலைமறைவாகி இருப்பது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எதிரிகளை பிடிக்க மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.