கலாம் கோளரங்கில் கண்டுபிடிப்பு மையம் நிறுவப்படும்: அமைச்சர் கந்தசாமி தகவல்
புதுச்சேரி டாக்டர் அப்துல் கலாம் கோளரங்கில் கண்டுபிடிப்பு மையம் விரைவில் நிறுவப்படும் என்று புதுவை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி டாக்டர் அப்துல் கலாம் கோளரங்கில் கண்டுபிடிப்பு மையம் விரைவில் நிறுவப்படும் என்று புதுவை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம், லக்னெüவில் மத்திய அறிவியல், தொழில்நுட்பம் - புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் சர்வதேச அறிவியல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு புதுவை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:
புதுவை மாநிலத்தில் 2015-ஆம் ஆண்டு டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் - கோளரங்கத்தை மத்திய அரசுடன் இணைந்து தொடங்கினோம். மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அரசு - அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் இந்த அறிவியல் மையத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். குறிப்பாக, பள்ளி விடுமுறை காலமான மே மாதத்தில் மாணவர்களின் நன்மைக்காக அறிவியல் முகாம் நடத்தப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், தகுதியுள்ள ஆய்வுகளுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகின்றன. தற்போது மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள தேசிய அறிவியல் அருங்காட்சியகத்துடன் இணைந்து, அறிவியல் மையத்தில் கண்டுபிடிப்பு மையம் நிறுவப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல, புதுவை மாநிலப் பகுதியான காரைக்காலில் உள்ள திருநள்ளாரில் ஒரு விண்வெளி விளக்க மையம், கோளரங்கம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அரசு பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள அறிவியல் ஆய்வு கூடங்களைப் பலப்படுத்துவதற்காக அறிவியல் தொழில்நுட்பம் - சுற்றுச்சூழல் துறை நிதியுதவி அளித்து வருகிறது என்றார் அவர்.