புதுச்சேரியிலிருந்து விடைபெற்றது பாரம்பரிய ரயில் இன்ஜின்!
புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களாக சுற்றுலாப் பயணிகளை பரவசப்படுத்திய பாரம்பரிய ரயில் இன்ஜின் சனிக்கிழமை இரவு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களாக சுற்றுலாப் பயணிகளை பரவசப்படுத்திய பாரம்பரிய ரயில் இன்ஜின் சனிக்கிழமை இரவு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
எக்ஸ்பிரஸ் இ.ஐ.ஆர். 21 என்ற நிலக்கரி மூலம் இயங்கும் நீராவி இன்ஜின் 1855-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, ரயில்களில் பயன்படுத்தப்பட்டது. 1909-ஆம் ஆண்டு இந்த இன்ஜின் பயன்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதன் பின்னர், மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா ஜமால்பூர் பணிமனையில் அந்த நீராவி இன்ஜின் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாள்களில் மட்டும் பாரம்பரிய நீராவி இன்ஜின் இயக்கப்பட்டது. 163 ஆண்டுகள் பழைமையான இந்த நீராவி இன்ஜின் நிலக்கரி மூலம் இயக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு இந்த ரயில் இன்ஜின் கொண்டு வரப்பட்டது. புதுச்சேரியில், கடந்த ஜூலை 28-ஆம் தேதி, ரயில் நிலையத்தில் இருந்து சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையம் வரை வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்பட்டது. 40 பயணிகள் பயணம் செய்யும் வகையில் பெட்டிகள் இணைக்கப்பட்டு, கடந்த 2 மாதத்தில், புதுச்சேரி - சின்னபாபுசமுத்திரம் இடையே இந்த ரயில் 10 முறை இயக்கப்பட்டது. புதுச்சேரியில் 2 மாதங்கள் இயக்கப்பட்ட இந்த நீராவி இன்ஜின் தனது பயணத்தை முடித்துக் கொண்டு, மதுரைக்கு சரக்கு ரயில் பெட்டியில் ஏற்றப்பட்டு, சனிக்கிழமை இரவு கொண்டு செல்லப்பட்டது.