மகளிர் காவல் நிலையம் சிபிசிஐடி கட்டடத்துக்கு இட மாற்றம்
புதுச்சேரி நேரு வீதியில் இயங்கி வந்த மகளிர் காவல் நிலையம் சிபிசிஐடி அலுவலகக் கட்டடத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டது.
புதுச்சேரி நேரு வீதியில் இயங்கி வந்த மகளிர் காவல் நிலையம் சிபிசிஐடி அலுவலகக் கட்டடத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டது.
புதுச்சேரி நேரு வீதியில் பெரியக்கடை காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த காவல் நிலையத்தை அதே நேரு வீதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையக் கட்டடத்துக்கு இட மாற்றம் செய்யவும், மகளிர் காவல் நிலையத்தை உருளையன்பேட்டையில் உள்ள சிபிசிஐடி காவல் நிலைய வளாகத்துக்கு மாற்றவும் புதுவை காவல் இயக்குநர் (டிஜிபி) சுந்தரி நந்தா உத்தரவிட்டார்.
இதையடுத்து, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா, கிழக்குக் காவல் நிலையக் கண்காணிப்பாளர் மாறன் ஆகியோர் கடந்த வாரம் அங்கு சென்று பெரியக்கடை காவல் நிலையத்தை மாற்றுவது தொடர்பாக ஆய்வு செய்தனர். இதற்கான பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், அனைத்து மகளிர் காவல் நிலையம் உருளையன்பேட்டையில் உள்ள சிபிசிஐடி காவல் நிலையக் கட்டடத்தின் கீழ் தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இட மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல, பெரியக்கடை காவல் நிலையத்தை மகளிர் காவல் நிலையம் இயங்கி வந்த கட்டடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
கட்டடத்துக்கு வர்ணம் அடித்து புதுப்பிக்கும் பணி முடிந்த உடன் விரைவில் பெரியக்கடை காவல் நிலையம் மாற்றம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.