புதுச்சேரி

பேருந்தில் பணப் பையைத் திருடி ஏடிஎம்-இல் பணம் எடுத்த பெண் கைது

DIN

புதுச்சேரியில் பேருந்தில் பணப் பையைத் திருடி ஏடிஎம்-இல் பணம் எடுத்த பெண்ணை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் மொரட்டாண்டி மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சங்கர். 
இவரது மனைவி மீரா (34). புதுச்சேரி நெல்லித்தோப்பில் வீட்டு வேலை செய்து வருகிறாராம். இதற்காக அவர் நாள்தோறும் பேருந்தில் புதுச்சேரிக்கு சென்று வருவது வழக்கமாம்.
இந்த நிலையில், கடந்த 
28 -ஆம் தேதி அவர் மொரட்டாண்டி அருகே பேருந்தில் ஏறி, புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய போது, அவரது செல்லிடப்பேசிக்கு வங்கியில் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 22 ஆயிரம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தனது பணப் பையைத் தேடிய போது, மர்ம நபர்கள் அதைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவர், உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர். இதில், அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே உள்ள ஏடிஎம்-இல் இருந்து பணம் எடுக்கப்பட்டதை போலீஸார் கண்டறிந்தனர். அங்கு, வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், குறிப்பிட்ட நேரத்தில் பணம் எடுத்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது. 
தொடர் விசாரணையில், அந்தப் பெண் புதுச்சேரி பழைய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள பாரதி தெருவில் வசிக்கும் கார்த்திக் மனைவி தேன்மொழி (25) என்பதும், இவரது சொந்த ஊர் விழுப்புரம் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் தேன்மொழியைக் கைது செய்து, அவரிடமிருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT