புதுச்சேரி

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க காங்கிரஸ் துணை நிற்கும்

DIN

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என புதுச்சேரி  வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறினார். 
காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற என்.எஃப்.டி.இ. - பி.எஸ்.என்.எல். தேசிய தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனம், குடந்தை மாவட்டம் சார்பில் 3-ஆவது மாவட்ட மாநாட்டில் மேலும் அவர் பேசியது: 
சுதந்திர இந்தியாவில் பிரதமராக பொறுப்பேற்ற ஜவாஹர்லால் நேரு, இந்தியா தொழிலாளர்கள் கொண்ட நாடு.  உழைப்பாளியால்தான் நாடு முன்னேற்றத்தை 
அடைய  முடியுமென கருதி, நாட்டின் வேகமான வளர்ச்சிக்காக  நவ வீரர்கள் என்ற குழுவை அமைத்து, இவர்களது பரிந்துரையின் பேரில் அரசுத் துறைகள் அல்லாது பொதுத் துறை நிறுவனங்களை ஏற்படுத்தினார். அரசின் மூலதனத்தினாலும், தொழிலாளர்களின் உழைப்பாலும் அரசுத் துறைகளைக் காட்டிலும் பொதுத் துறை நிறுவனங்கள் வளத்தைத் தரும் என அவர் நம்பினார். ஓ.என்.ஜி.சி. போன்ற சில பொதுத் துறை நிறுவனங்கள் இயற்கையிலேயே நல்ல லாபமீட்டுவதாக அமைந்துவிட்டது. சில நிறுவனங்கள் மிதமான நிலையில் உள்ளன. காங்கிரஸ் ஆளும் நிலை வரை பொதுத் துறை நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசின் பல்வேறு மக்கள் விரோத போக்கில் பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்கள் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. இதை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
இதுபோன்ற பொதுத் துறை நிறுவனங்களின் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தும் வகையில் மத்திய அரசின் போக்கு உள்ளது. ஆனால், காங்கிரஸ் பேரியக்கம் இதற்கு எந்த தருணத்திலும் உடன்படாது. 
பிரதமர் நரேந்திர மோடியின் ரஃபேல் போர் விமான தொடர்பான ஒப்பந்த விவகாரத்தில், மத்திய அரசு எவ்வாறு முதலாளித்துவத்தை நாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கிறது என்பதை தெளிவாக ராகுல் காந்தி பேசி வருகிறார்.  பொதுத்துறை நிறுவனங்களை அரசு செல்லப்பிள்ளையாக பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, நலிவடைய அனுமதிக்கக் கூடாது என அவர் கூறியுள்ளார். எனவே, இந்த நிறுவனத்தின் வளர்ச்சி, பாதுகாப்புக்கு காங்கிரஸ் கட்சி பெரிதும் துணை நிற்கும் என்றார் கமலக்கண்ணன். 
மாவட்டத் தலைவர் சி. கணேசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கை என்.எஃப்.டி.இ. மாவட்ட செயலர் எம்.விஜய்ஆரோக்கியராஜ் தொடக்கிவைத்தார். மாவட்டத் தலைவர் பி. காமராஜ் புதிய மாற்றமும் 4 ஜி அலைக்கற்றையும் என்ற தலைப்பில் பேசினார். 
பொதுத் துறை காக்கும் அரசியல் தேர்வு செய்வோம் எனும் தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.விஸ்வநாதன் பேசினார்.  மத்திய சங்க சிறப்பு அழைப்பாளரான ஏ. செம்மல் அமுதம், என்.எஃப்.டி.இ. மாநிலச் செயலர் கே.நடராஜன் ஆகியோர் பேசினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT