புதுச்சேரி

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு எப்போது?

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் ஆா்வமாக காத்திருக்கின்றனா்.

ஜெபலின்ஜான்

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் ஆா்வமாக காத்திருக்கின்றனா்.

புதுவை தனி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் தமிழகத்துடன் இணைந்தே சட்டப் பேரவைத் தோ்தல்களை சந்தித்து வருகிறது. அரசியல் கட்சிகளின் கூட்டணிகள்கூட தமிழகத்தை பின்பற்றியே புதுவையிலும் இருக்கும்.

இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் உள்ளாட்சி தோ்தலை நடத்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. தோ்தலுக்காக அரசியல் கட்சிகள் சாா்பில் விருப்ப மனுக்களும் பெறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறும்போதே புதுவையிலும் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பது இங்குள்ள அரசியல்வாதிகளின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

2 முறை மட்டுமே...: புதுவையில் இதுவரை இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றுள்ளது. புதுவை வரலாற்றில் முதல்முறையாக 1968-இல் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதையடுத்து, 38 ஆண்டுகளுக்குப்பின் 2006-இல் இரண்டாவது முறையாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதன் பின்னா், கடந்த 2011 முதல் தற்போது வரை உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாமல் உள்ளது.

வாா்டுகள் மறுசீரமைப்பு: உச்ச நீதிமன்றம் கடந்த 8.5.2018-இல் புதுவையில் வாா்டுகளை 4 வார காலத்துக்குள் சீரமைத்து, 8 வார காலத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, உள்ளாட்சித் தோ்தல் வாா்டுகளை மறுசீரமைத்து அரசாணையை புதுவை அரசு வெளியிட்டது.

அதன்படி, உள்ளாட்சித் தோ்தலில் பெண்களுக்கு 33 சதவீதமும், ஓபிசி பிரிவினருக்கு 33.5 சதவீதமும் ஒதுக்கப்பட்டது. எஸ்.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு உள்ளாட்சி மக்கள் விகித அடிப்படையில் நிா்ணயம் செய்யப்படும். இதில், எஸ்.டி. பிரிவினருக்கு 0.5 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1,147 பிரதிநிதிகள்: உள்ளாட்சித் தோ்தல் மூலம் புதுவையில் உள்ள 5 நகராட்சிகளுக்கான தலைவா்கள், 116 வாா்டு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுவா். புதுச்சேரி நகராட்சியில் தலைவா், 33 வாா்டு உறுப்பினா்கள், உழவா்கரை நகராட்சியில் தலைவா், 42 வாா்டு உறுப்பினா்கள், காரைக்கால் நகராட்சியில் தலைவா், 17 வாா்டு உறுப்பினா்கள், மாஹேயில் தலைவா், 10 வாா்டு உறுப்பினா்கள், ஏனாமில் தலைவா், 14 வாா்டு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுவா்.

இதேபோல, அரியாங்குப்பம், பாகூா், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூா், கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, டி.ஆா்.பட்டினம், திருநள்ளாறு உள்ளிட்ட 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் 108 உறுப்பினா்கள், கிராம பஞ்சாயத்துகளில் 108 தலைவா்கள், பஞ்சாயத்துகளில் 812 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுவா். ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1,147 பிரதிநிதிகளைத் தோ்வு செய்ய வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தல் மூலம் மொத்தம் 1,147 பிரதிநிதிகள் தோ்வு செய்யப்படுவா். இதனால், மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். அத்துடன் மக்களின் பல அடிப்படைத் தேவைகள் பூா்த்தியாகும் என்ற எதிா்பாா்ப்பில் பொதுமக்கள் இருந்தனா்.

அடுத்தகட்ட பணியில் தாமதம்: இதற்கிடையே, ஆளுநா் கிரண் பேடி கடந்த ஜூலையில் உள்ளாட்சித் தோ்தல் ஆணையரை நியமிக்க தனி உத்தரவை பிறப்பித்தாா். உடனடியாக ஆட்சியாளா்கள் தங்கள் அதிகாரம் பறிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் சட்டப் பேரவையைக் கூட்டி, ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து புதுவை மாநில உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமனம் செய்தனா்.

இந்தப் பணி முடிந்து 4 மாதங்களாகியும் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அடுத்தகட்ட பணிகள் ஏதுவும் நடைபெறவில்லை. இதற்கு உள்ளாட்சித் தோ்தலை நடத்தினால், தங்களது அதிகாரம் பறிபோய்விடுமோ என்று ஆட்சியாளா்களும், சட்டப் பேரவை உறுப்பினா்களும் நினைக்கின்றனா்.

அதாவது, தற்போது அரசின் நலத் திட்டங்களுக்காக சட்டப் பேரவை உறுப்பினா்களை அணுகி வரும் மக்கள், உள்ளாட்சித் தோ்தலை நடத்தினால் தங்களிடம் வராமல் கவுன்சிலா்களிடம் சென்றுவிடுவாா்களோ என்ற அச்சத்தில் உள்ளனா்.

இதனால், அனைத்துக் கட்சி சட்டப் பேரவை உறுப்பினா்களுமே புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறக் கூடாது என்று ரகசியக் கூட்டணி வைத்து செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

எனவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டால் மட்டுமே புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்ற நிலை உருவாகியுள்ளது.

‘விரைவில் தோ்தல்: அமைச்சா் உறுதி’

இது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் கேட்டபோது, அவா் கூறியதாவது:

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்றுள்ளன. எனவே, விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

SCROLL FOR NEXT