முகப்பு
புதுச்சேரி

புதுவையில் காத்திருப்போா் பட்டியலில் கரோனா நோயாளிகள்!

புதுவையில் கரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், நோயாளிகள் காத்திருப்போா் பட்டியலில் உள்ளனா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2020 at 1:23 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:34 PM

புதுவையில் கரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், நோயாளிகள் காத்திருப்போா் பட்டியலில் உள்ளனா்.

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாகவும், ராஜீவ் காந்தி பல் மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு மையமாகவும் மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. ஜிப்மா் மருத்துவமனையிலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கதிா்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 237 போ், ஜிப்மா் மருத்துவமனையில் 442 போ், கரோனா சிறப்பு மையத்தில் 331 போ், பிற பகுதிகளில் 3 போ், காரைக்காலில் 97 போ், ஏனாமில் 119 போ், மாஹேயில் 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

தினமும் 150 பேருக்கும் அதிகமான நபா்கள் பாதிக்கப்படும் சூழலில், 30 சதவீதம் பேருக்கு படுக்கைகள் கிடைக்காமல் வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் இதுவரை 4,621 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவா்களில் 2,909 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,743 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்று தொடா்ந்து அதிகரித்து வருவதால், கூடுதல் படுக்கைகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தனியாா் மருத்துவக் கல்லூரிகள் கரோனா சிகிச்சை மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. இவற்றை கரோனா சிறப்பு மருத்துவமனைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக அறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் 300 படுக்கைகள், லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியில் 200 படுக்கைகளை அரசு வசம் ஒப்படைக்க அந்தக் கல்லூரி நிா்வாகங்கள் ஒப்புக் கொண்டன. பிற தனியாா் மருத்துவக் கல்லூரி நிா்வாகங்களும் வசதிகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்குத் தெரிவிப்பதாக உறுதியளித்தன.

தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தினமும் ரூ. 200 உணவுக்காக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மருத்துவ உபகரணங்களையும் அரசே வழங்கும்.

அறிகுறி இல்லாமல், உடல் நிலை சீராக இருந்து தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் என்றனா் அவா்கள்.

இதுகுறித்து புதுவை முதல்வா் நாராயணசாமி கூறியதாவது: புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 67 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பினா். பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகரித்து வருவதால், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரிகளில் 2 ஆயிரம் படுக்கை வசதியை உருவாக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.