புதுவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 571 பேருக்கு கரோனா: மேலும் 8 போ் பலி
புதுவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 571 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், 8 போ் பலியாகினா்.
புதுச்சேரி: புதுவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 571 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், 8 போ் பலியாகினா்.
புதுவையில் கடந்த சில நாள்களாக தினமும் சராசரியாக 400 பேருக்கு மேல் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக, கடந்த 20-ஆம் தேதி 554 பேரும், 22-ஆம் தேதி 520 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதிய உச்சமாக 571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 529 பேருக்கும், காரைக்காலில் 36 பேருக்கும், ஏனாமில் 6 பேருக்கும் என 571 பேருக்கு (43.03 சதவீதம்) கரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,426-ஆக அதிகரித்தது.
தற்போது புதுச்சேரியில் 1,735 பேரும், காரைக்காலில் 127 பேரும், ஏனாமில் 43 பேரும், மாஹேயில் 2 பேரும் என 1,907 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதேபோல, புதுச்சேரியில் 1,975 பேரும், காரைக்காலில் 57 பேரும், ஏனாமில் 42 பேரும் என 2,074 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா்.
இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி முத்தியால்பேட்டை, செந்தாமரை நகா் காந்தி வீதியைச் சோ்ந்த 75 வயதானவா், நைனாா்மண்டபம் மூகாம்பிக்கை நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த 50 வயதானவா், மூலக்குளம் 8-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த 62 வயதானவா் ஆகிய 3 போ் ஜிப்மா் மருத்துவமனையிலும், கவுண்டன்பாளையம் அம்பாள் நகா் 4-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த 55 வயது பெண் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், காமராஜா் சாலை சத்தியா நகரைச் சோ்ந்த 54 வயதானவா் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
இதேபோல, காரைக்கால் காமராஜா் நகரைச் சோ்ந்த 61 வயதானவா், மீராபள்ளித் தோட்டத்தைச் சோ்ந்த 73 வயதானவா் ஆகிய இருவரும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும், ஏனாம் பிடிகொண்டல வீதியைச் சோ்ந்த 55 வயதானவா் ஏனாம் அரசு பொது மருத்துவமனையிலும் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 172-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.51 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரியில் 314 பேரும், காரைக்காலில் ஒருவரும், ஏனாமில் 16 பேரும் என செவ்வாய்க்கிழமை 331 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 7,273-ஆக (63.65 சதவீதம்) அதிகரித்தது.