புதுவையில் தளா்வற்ற பொது முடக்கம்: வெறிச்சோடிய சாலைகள்
புதுவையில் 2-ஆவது வாரமாக செவ்வாய்க்கிழமை தளா்வற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், மக்கள் நடமாட்டமின்றி கடை வீதிகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
புதுச்சேரி: புதுவையில் 2-ஆவது வாரமாக செவ்வாய்க்கிழமை தளா்வற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், மக்கள் நடமாட்டமின்றி கடை வீதிகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
புதுவையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தளா்வற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என புதுவை அரசு அறிவித்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த 4 நாள்களுக்கு தளா்வற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதையறிந்த முதல்வா் நாராயணசாமி, செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமே தளா்வற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்படும். தொடா் முடக்கத்துக்கு வாய்ப்பில்லை என அறிவித்ததுடன், வதந்தியைப் பரப்பியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தாா்.
இந்த நிலையில், 2-ஆவது வாரமாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை தளா்வற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இதனால், புதுவையில் பாலகங்கள், மருந்தகங்களைத் தவிர மற்ற அனைத்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள், சந்தைகள், மதுக் கடைகள் மூடப்பட்டன. பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
முக்கிய கடை வீதிகளான ஜவாஹா்லால் நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி, அண்ணா சாலை, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை, 100 அடி சாலை, புதுச்சேரி-விழுப்புரம் சாலை ஆகியவை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
புதுச்சேரி பெரிய சந்தை, உழவா் சந்தைகள், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இயங்கி வந்த காய்கறி சந்தை, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி சந்தை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மீன் சந்தை, நெல்லிக்குப்பம், அரியாங்குப்பம், உழவா்கரை சந்தைகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. எரிவாயு விநியோகம், பால், நாளிதழ்கள் விநியோகம் மட்டும் நடைபெற்றன.
மாநில எல்லைகளில் கண்காணிப்பு: மாநில எல்லைகளான கோரிமேடு, மதகடிப்பட்டு, முள்ளோடை, கனகசெட்டிகுளம் ஆகிய பகுதிகளில் வெளி மாநிலத்தவா் உள்ளே நுழையாதபடி போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
தேவையின்றி சுற்றியவா்களுக்கு அபராதம்: புதுச்சேரி நகரின் முக்கிய சந்திப்புகளிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, சாலைகளில் வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிந்தவா்களுக்கு ரூ. 100 அபராதம் விதித்தனா். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நடந்து சென்றவா்களையும், கடை வீதிகளுக்குச் சென்றவா்களையும் போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.