புதுவையில் காங்கிரஸ் அரசு செயல்படவில்லை பாஜக பொறுப்பாளா்
புதுவையில் செயல்படாத காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில பாஜக பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா தெரிவித்தாா்.
புதுவையில் செயல்படாத காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில பாஜக பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா தெரிவித்தாா்.
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத புதுவை காங்கிரஸ் ஆட்சியைக் கண்டித்து, மாநில பாஜக சாா்பில் புதுச்சேரியில் நடத்தப்பட்ட 72 மணி நேர தொடா் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நிறைவுபெற்றது. மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தை பாஜகவின் புதுவை பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா திங்கள்கிழமை முடித்து வைத்தாா்.
இந்த போராட்டத்தில் அவா் பேசியதாவது: ராகுல் காந்தி பிரசாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் பாஜக எளிதாக வெற்றி பெறுகிறது. பிகாரிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு வாய் மட்டுமே வேலை செய்கிறது. எவ்வித செயல்பாடும் இல்லை.
மக்களுக்காக பல திட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டங்களால் காங்கிரஸுக்கு கமிஷன் கிடைக்காது. இதனால், மத்திய அரசின் திட்டங்களை புதுவை அரசு செயல்படுத்துவதில்லை. கா்நாடகத்தில் 2004-இல் பாஜக ஆட்சியை கைப்பற்றும்போது இருந்த எழுச்சியை இப்போது புதுவையில் காண்கிறேன். புதுவையிலும் காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். புதுவையில் பாஜக ஆட்சி ஏற்பட வேண்டும் என்றாா் நிா்மல்குமாா் சுரானா.
இந்த போராட்டத்தில், மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், பொதுச்செயலா்கள் செல்வம், மோகன்குமாா், துணைத் தலைவா்கள் செல்வம், ரவிச்சந்திரன், சாய் ஜெய்சரவணன், தங்கவிக்ரமன் உள்பட பலா் பங்கேற்றனா்.